சோவியத் காலகட்ட BMP-2 கவச வாகனங்களை அடுத்த தலைமுறைக்கு தரம் உயர்த்த முடிவு !!

இந்திய தரைப்படை சுமார் 2000 சோவியத் ஒன்றிய காலத்தில் தொழில்நுட்ப பரிமாற்ற அடிப்படையில் இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட BMP – 2 காலாட்படை சண்டை கவச வாகனங்களை பயன்படுத்தி வருகிறது.

தற்போது இந்த BMP 2 கவச வாகனங்களை இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட அடுத்த தலைமுறை தொழில்நுட்பங்களை கொண்டு மேம்படுத்த இந்திய தரைப்படை முடிவு செய்துள்ளது அதிலும் குறிப்பாக இவற்றில் 800 வாகனங்கள் சிறப்பு அமைப்பை பெற உள்ளன.

உக்ரைனில் நடைபெற்று வரும் போரில் மேற்கத்திய பாதுகாப்பு அமைப்புகள் பொருத்தப்பட்ட இதே உக்ரைனிய கவச வாகனங்கள் தாக்கப்பட்ட பிறகும் கூட பெரிய சேதம் இன்றி நல்ல முறையில் இயங்குவது இந்திய தரைப்படை அதிகாரிகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.

ஆகவே இந்திய கவச வாகனங்களில் வாகனத்திற்கு உள்ளே இருந்து கொண்டே நாலாபுறமும் 360 டிகிரி கோணத்தில் ஊடுருவி பார்க்கும் வசதி இது எத்தகைய இருளிலும் பார்க்க உதவும், இதனை மூன்று நிறுவனங்கள் தயாரித்துள்ள நிலையில் ஒன்று மட்டும் தேர்வு செய்யப்படும்.

மேலும் பரந்த பார்வை அளிக்கும் PV கருவி, அதிநவீன தாக்குதல் கட்டுபாட்டு அமைப்பு, தானியங்கி இலக்கு கண்டறிதல் அமைப்பு மற்றும் 800 வாகனங்களில் மேற்குறிப்பிட்ட வசதிகளுடன் கூடுதலாக கவச வாகனங்கள், பாதுகாக்கப்பட்ட நிலைகள் மற்றும் வீரர்களை தாக்கும் திறன் கொண்ட கவச எதிர்ப்பு மிதவை குண்டுகள் ஆகியவை இணைக்கப்படும்.

அரத பழைய கவச வாகனங்களுக்கு மாற்றாக இந்திய தரைப்படை இந்திய பொதுத்துறை மற்றும் தனியார் துறை நிறுவனங்களுடன் இணைந்து உருவாக்கி வரும் FICV எனப்படும் எதிர்கால காலாட்படை சண்டை வாகனத்திற்கு இந்த மேம்படுத்தப்பட்ட BMP-2 கவச வாகனங்கள் முன்னோடியாக அமையும் என்பது குறிப்பிடத்தக்கது.