பழைய ஹெலிகாப்டர்களை தொடர்ந்து பயன்படுத்தி வீரர்களை பலி கொடுத்து வருவதாக ராணுவ மனைவிகள் போராட்ட குழு பிரதமருக்கு கடிதம் !!

  • Tamil Defense
  • October 10, 2022
  • Comments Off on பழைய ஹெலிகாப்டர்களை தொடர்ந்து பயன்படுத்தி வீரர்களை பலி கொடுத்து வருவதாக ராணுவ மனைவிகள் போராட்ட குழு பிரதமருக்கு கடிதம் !!

சமீபத்தில் அதாவது அக்டோபர் 4ஆம் தேதி அருணாச்சல பிரதேச மாநிலம் தவாங் பகுதியில் இந்திய தரைப்படையின் ஹெலிகாப்டர் ஒன்று விபத்துக்குள்ளானது, இதில் தேர்ந்த மற்றும் மூத்த ஹெலிகாப்டர் விமானியான லெஃப்டினன்ட் கர்னல் சவ்ரப் யாதவ் வீரமரணம் அடைந்தார்.

துணை விமானி உடனடியாக மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார், தொடர்ந்து விசாரணை நடைபெற்று வரும் நிலையில் முதல்கட்ட விசாரணை முடிவுகளில் அரத பழைய சேத்தக் ஹெலிகாப்டரின் என்ஜின் பழுதானதே காரணம் என தெரிய வந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனை தொடர்ந்து 140 பேர் கொண்ட தரைப்படை மனைவிகள் போராட்ட குழு பிரதமர் மோடிக்கு தொடர்ந்து இந்தியா அரத பழைய ஹெலிகாப்டர்களை பயன்படுத்துவதன் மூலமாக வீரர்களை தேவையின்றி பலிகொடுத்து வருவதாகவும் 2017 முதல் இன்று வரை சேத்தக் மற்றும் சீட்டா ஆகிய ஹெலிகாப்டர்கள் 31 விமானிகளின் மரணத்திற்கு காரணமாக இருந்துள்ளதையும் சுட்டி காட்டி

நாட்டின் எல்லைகளை பாதுகாக்க இந்திய தரைப்படை அதிகாரிகளுக்கு பாதுகாப்பான வானூர்திகளை அளிக்க வேண்டியது முக்கியமல்லவா அது அவர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினரின் உரிமையல்லவா எனவும் அந்த கடிதத்தில் கேள்வி எழுப்பி உள்ளனர்.

இந்த குழுவை தோற்றுவித்த திருமதி மீனால் வாக் போஸ்லே ஒர் ராணுவ விமானியின் மனைவி ஆவார், இந்த குழுவில் உள்ள பலரும் இந்திய தரைப்படை விமானிகள் மற்றும் வானூர்திகளை பராமரிக்கும் பொறியாளர்களின் மனைவிகள் ஆவர், திரு மனோகர் பாரிக்கர் பாதுகாப்பு அமைச்சராக இருந்த போது இந்த குழு தோற்றுவிக்கப்பட்டது.

அப்போது அவரை சந்தித்து மனு அளித்த அவர்கள் கடந்த 30 ஆண்டுகளில் இந்த இரண்டு ஹெலிகாப்டர்களில் 191 ஹெலிகாப்டர்கள் விபத்தில் சிக்கி 294 விமானிகளை கொன்றுள்ளன மேலும் இந்த விபத்துகள் பெரும்பாலும் இந்திய சீன எல்லையோரம் நடைபெற்றுள்ளதாகவும்

60 ஆண்டுகள் பழமையான இந்த ஹெலிகாப்டர்களை இந்திய தரைப்படை மற்றும் இந்திய விமானப்படை தொடர்ந்து பயன்படுத்தி வருவதில் அர்த்தமே இல்லை எனவும் ஆனாலும் தொடர்ந்து இவை இந்திய படைகளின் முதுகெலும்பாக தொடர்வது சரியல்ல எனவும் அந்த குழுவினர் தெரிவித்தனர்.