மிக்29 போர் விமானங்களை மேம்படுத்தும் இந்திய விமானப்படை !!

  • Tamil Defense
  • October 19, 2022
  • Comments Off on மிக்29 போர் விமானங்களை மேம்படுத்தும் இந்திய விமானப்படை !!

இந்திய விமானப்படை தனது மிக்-29 Mig-29 ரக போர் விமானங்களின் ஆயுட்காலத்தை இரண்டாவது முறையாக சுமார் 40 முதல் 50 ஆண்டுகள் வரை அதிகரிக்கும் வகையில் அவற்றை மேம்படுத்த திட்டமிட்டு உள்ளது.

கடந்த 1986ஆம் ஆண்டு படையில் இணைக்கப்பட்ட இந்த போர் விமானங்கள் முதல் முறையாக கடந்த 2000ஆம் ஆண்டில் மேம்படுத்தப்பட்டு அவற்றின் ஆயுட்காலம் நீட்டிக்கப்பட்டது, இதன்பிறகு காங்கிரஸ் ஆட்சியில் அன்றைய பாதுகாப்பு அமைச்சர் ஏ கே ஆண்டனி 25 முதல் 40 ஆண்டுகளுக்கு அதிகரிக்கப்பட்டு உள்ளதாக தெரிவித்தார்.

அந்த வகையில் முதலில் ஆயுட்காலம் நீட்டிக்கப்பட்ட விமானங்களின் ஆயுட்காலம் 2025ஆம் ஆண்டு முதல் காலாவதியாகும் நிலையில் இந்திய விமானப்படையின் படையணிகள் பலம் குன்றாமல் தடுக்க இந்த இரண்டாவது ஆயுட்கால நீட்டிப்பு மேம்பாட்டு பணிகள் நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது.

இந்த மேம்பாட்டு பணிகள் ரஷ்ய தயாரிப்பு விமானங்களின் பராமரிப்பு மற்றும் மேம்படுத்தல் பணிகளை மேற்கொள்ளும் இந்திய விமானப்படையின் 11ஆவது தள பராமரிப்பு பணிமனையில் நடைபெறும் இதில் இந்திய நிறுவனங்கள் மட்டுமே கலந்து கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

போர் விமானத்தின் விமானத்தின் உடல், என்ஜின், ஏவியானிக்ஸ், சிறு பாகங்கள், தொழில்நுட்ப அமைப்புகள், விமான பாகங்களின் உறுதி போன்றவற்றை ஆய்வு செய்து சரிபார்த்தல், பராமரிப்பு, மேம்படுத்தல் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்பது கட்டாயம் ஆகும்.

இந்திய விமானப்படை 66 Mig-29 ரக விமானங்களை மூன்று படையணிகளில் இயக்கி வருகிறது, இரண்டு படையணிகள் குஜராத்தின் ஜாம்நகர் மற்றும் பஞ்சாபின் ஆதம்புர் மூன்றாவது படையணி காஷ்மீரில் ஶ்ரீநகர் படைத்தளத்தில் இருந்து படைவிலக்கம் செய்யப்பட்ட மிக-21 Mig-21 படையணிக்கு பதிலாக நிலைநிறுத்தப்பட்டு உள்ளது கூடுதல் தகவல.