அடுத்த ஆண்டு வெளிவரும் சுதேசி இலகுரக டாங்கி !!

  • Tamil Defense
  • October 14, 2022
  • Comments Off on அடுத்த ஆண்டு வெளிவரும் சுதேசி இலகுரக டாங்கி !!

அடுத்த ஆண்டு இந்தியா சொந்தமாக வடிவமைத்து தயாரித்த இலகுரக டாங்கியான ஸோராவர் வெளிவர உள்ளது, முன்னர் இந்த டாங்கியின் டிசைன் K9 வஜ்ராவை அடிப்படையாக கொண்டது என கூறப்பட்டு வந்த நிலையில் தற்போது இந்தியா எதிர்காலத்தில் தயாரிக்க உள்ள கனரக அதிநவீன FMBT Futuristic Main Battle Tank எனப்படும் எதிர்கால பிரதான போர் டாங்கியின் டிசைனை அடிப்படையாக கொண்டு இருக்கும் என தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஆகவே தற்போது இரண்டு கேள்விகள் எழுந்துள்ளன முதலாவது இந்தியாவின் கனவு திட்டமான FMBT க்கு தேவையான டிசைன் தயார் நிலையில் உள்ளதா ?? இரண்டாவது ஒருவேளை இது தயாராக இல்லையெனில் இனிதான் அந்த டிசைன் தயார் செய்யப்பட்டு அதனை அடிப்படையாக கொண்டு ஸோராவர் வடிவமைக்கப்படுமா என்பனவாகும், எது எப்படியோ ஸோராவர் FMBT க்கு முன்னோடியாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

சீனா லடாக்கில் தனது ZTZ-04A ரக இலகுரக டாங்கிகளை களமிறக்கிய போது இந்திய தரைப்படையும் இமயமலை பகுதியில் இலகுரக டாங்கிகளை களமிறக்கி இயக்குவதற்கு விரும்பியது, மலை பிரதேசம் ஆகையால் இலகுவான ஆனால் கனரக டாங்கிக்கு இணையான தாக்குதல் திறன் கொண்ட டாங்கியை பெற இந்திய தரைப்படை விரும்பியது.

ஆகவே அந்த நேரத்தில் உடனடியாக ரஷ்யாவிடம் இருந்து Sprut ஸ்ப்ரூட் இலகுரக டாங்கிகளை வாங்கி பயன்படுத்த திட்டமிடப்பட்ட நிலையில் பின்னர் இந்திய தேவைக்கேற்ப உள்நாட்டிலேயே முழுவதும் வடிவமைத்து தயாரிக்கப்பட்ட இரு இலகுரக டாங்கியை பெறுவதற்கு இந்திய தரைப்படை விருப்பம் தெரிவித்தது.

அப்போது லார்சன் அன்ட் டூப்ரோ Larsen And Toubro ( L & T) நிறுவனம் தென்கொரியாவில் இருந்து தொழில்நுட்ப பரிமாற்ற அடிப்படையில் தொழில்நுட்பத்தை பெற்று தயாரித்து வந்த கே9 வஜ்ரா K9 VAJRA தானியங்கி பிரங்கிகளின் சேஸியை அடிப்படையாக கொண்டு DRDO உதவியுடன் இந்த இலகுரக டாங்கி தயாரிக்கப்படும் என தகவல்கள் தெரிவித்தன.

இந்த நிலையில் தற்போது ஸோராவர் முற்றிலும் புதிய ஆனால் FMBT டாங்கிக்கு முன்னோடியாக அதன் டிசைனை அடிப்படையாக கொண்டு DRDO எனப்படும் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் மற்றும் தனியார் துறை உதவியோடு தயாரிக்கப்படும் எனவும் வடிவமைப்பை DRDOவும் தயாரிப்பை தனியார் நிறுவனம் ஒன்றும் மேற்கொள்ளலாம் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த ஸோராவர் டாங்கியில் செயற்கை அறிவாற்றல் திறன், Swarm Drone குழுவாக இயங்கும் ஆளில்லா விமானங்களுடன் இணைந்து செயலாற்றும் திறன், மிதவை குண்டுகளை ஏவி தாக்குதல் நடத்தும் திறன், கவச எதிர்ப்பு ஆயுதங்களிடம் இருந்து பாதுகாப்பு அளிக்கும் தற்காப்பு அமைப்பு போன்றவை இருக்கும் எனவும்

மேலும் இந்த டாங்கி எந்தளவுக்கு முடியுமோ அந்தளவுக்கு எதிரி டாங்கி எதிர்ப்பு ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களின் தாக்குதலில் இருந்து தப்பிக்கும் திறனுடன் இருக்கும் என்பதும் இதற்கு காரணம் உக்ரைன் போரில் கிடைத்துள்ள படிப்பினைகள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

1841ஆம் ஆண்டு சீனர்களுக்கு எதிராக டோக்ரா படைகளை வழிநடத்தி திபெத்திலும் லடாக்கிலும் வெற்றி கண்ட சீக்கிய பேரரசின் முக்கிய தளபதியான ஜெனரல் ஸோராவர் சிங் கலூரியா அவர்களின் பெயர் தான் இந்தியாவின் சுதேசி இலகுரக டாங்கிக்கு (ஸோராவர்) சுட்டுப்பட்டுள்ளது என்பது கூடுதல் சிறப்பு ஆகும்.