அருணாச்சல பிரதேச விபத்து; அனைத்து த்ரூவ் வானூர்திகளையும் சோதனை செய்ய உத்தரவு !!

சமீபத்தில் அருணாச்சல பிரதேச மாநிலத்தில் த்ரூவ் ரக ஹெலிகாப்டரின் ஆயுதம் தாங்கிய வடிவமான ரூத்ரா மலையில் விழுந்து விபத்துக்குள்ளானதில் ஐந்து தரைப்படை வீரர்கள் வீரமரணம் அடைந்தனர்.

இதனையடுத்து இந்திய தரைப்படை, விமானப்படை, கடற்படை மற்றும் கடலோர காவல்படை ஆகியவற்றில் உள்ள 300க்கும் அதிகமான த்ரூவ் மற்றும் ரூத்ரா ரக ஹெலிகாப்டர்களை சோதனை செய்ய இந்திய பாதுகாப்பு அமைச்சகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

மார்க்-1, மார்க்-2, மார்க்-3 மற்றும் WSI ரகங்களை சேர்ந்த இந்த த்ரூவ் மற்றும் ரூத்ரா ஹெலிகாப்டர்களை அந்தந்த படையணிகளை சேர்ந்த பராமரிப்பு குழுவினர் சோதனை செய்து அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும், அடுத்த இரண்டு நாட்களுக்கு உள்ளாக இதை முடிக்கப்படும் எனவும் ஏற்கனவே பல ஹெலிகாப்டர்களின் சோதனைகள் வெற்றிகரமாக முடிந்துள்ளதாகவும் பாதுகாப்பு அமைச்சக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த சோதனையின் போது ஹெலிகாப்டர்களின் என்ஜின்கள், விசிறிகள், என்ஜின் மற்றும் விசிறிகளை கட்டுபடுத்தும் கட்டுபாட்டு அமைப்பு ஆகியவை முழுவதுமாக சோதனை செய்யப்படும் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவெனில் விபத்து நடந்த போது வானிலை தெளிவாக இருந்தது ஆனால் விமானிகள் “Mayday” அழைப்பை கட்டுபாட்டு அறைக்கு விடுத்துள்ளனர் அதாவது வானூர்தியில் கோளாறு ஏற்பட்டால் தான் விமானிகள் இந்த அழைப்பை விடுப்பர்

ஆகவே தான் முதல்கட்ட விசாரணை முடிவு பெற்ற நிலையில் பாதுகாப்பு அமைச்சகம் அனைத்து இலகுரக த்ரூவ் மற்றும் ரூத்ரா ஹெலிகாப்டர்களை சோதனை செய்ய உத்தரவு பிறப்பித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.