2025-2026 முதல் ஒய்வு பெறும் ஜாகுவார் போர் விமானங்கள் !!

  • Tamil Defense
  • October 8, 2022
  • Comments Off on 2025-2026 முதல் ஒய்வு பெறும் ஜாகுவார் போர் விமானங்கள் !!

இந்திய விமானப்படை தலைமை தளபதி ஏர் சீஃப் மார்ஷல் விவேக் ராம் சவுதிரி செவ்வாய்கிழமை அன்று ஊடகவியலாளர்களை சந்தித்து பேசினார் அப்போது பல முக்கிய தகவல்களை அவர் தெரிவித்தார்.

அதாவது மேம்படுத்தப்படாத ஜாகுவார் SEPECAT JAGUAR போர் விமானங்கள் அனைத்தும் 2025-2026 முதலாக தொடங்கி 2033ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் படையில் இருந்து விலக்கப்படும் எனவும்,

அடுத்த மூன்று ஆண்டுகளில் இந்திய விமானப்படையின் பயன்பாட்டில் உள்ள எஞ்சிய அனைத்து மிக்-21 Mig-21 Bison ரக போர் விமானங்களும் படையில் இருந்து விலக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

இந்திய விமானப்படை தற்போது 1979 முதல் 2009 வரை படையில் இணைக்கப்பட்ட 6 படையணிகள் அளவிலான 108 ஜாகுவார் போர் விமானங்களை பயன்படுத்தி வருகிறது, இவற்றில் 37 விமானங்களை HAL தொழில்நுட்ப பரிமாற்ற அடிப்படையில் இந்தியாவிலேயே தயாரித்தது.

இந்திய விமானப்படை இவற்றில் 56 ஜாகுவார் போர் விமானங்களை DARIN 3 அந்தஸ்திற்கு தரம் உயர்த்திய நிலையில் அவற்றில் Honeywell F-125 IN ரக என்ஜின்களை பொருத்தி மேம்படுத்த நினைத்தது.

இதன்மூலம் அவற்றை 2038ஆம் ஆண்டு வரை பயன்படுத்தி கொள்ள முடிந்திருக்கும் ஆனால் பின்னர் அதற்கு அதிகமாக செலவாகும் என்பதால் இந்திய விமானப்படை அந்த திட்டத்தை கைவிட்டது குறிப்பிடத்தக்கது.