மேம்படுத்தப்படாமல் நிறுத்தப்பட்டுள்ள உலகின் மிகப்பெரிய இந்திய Mi-26 கனரக ஹெலிகாப்டர்கள் !!

இந்திய விமானப்படை மூன்று Mi-26 ரக கனரக ஹெலிகாப்டர்களை பயன்படுத்தி வந்தது இவை சோவியத் ஒன்றிய காலகட்டத்தில் இந்திய விமானப்படைக்கு வாங்கப்பட்டவையாகும்.

ஆரம்பம் முதலே இந்திய விமானப்படையில் எல்லையோரம் வீரர்கள் மற்றும் தளவாடங்களை நகர்த்தவும் மேலும் தேவைப்படும் போது மனிதாபிமான நடவடிக்கைகளில் ஈடுபடவும் மற்றும் ஆம்புலன்ஸாகவும் பயன்படுத்தப்பட்டு வந்தது.

இந்த நிலையில் இவை மூன்றும் முறையே 2013, 2014 மற்றும் 2017 ஆகிய ஆண்டுகளில் செயல்படுவதை நிறுத்தின, சண்டிகர் விமானப்படை தளத்தில் இருந்து இயங்கும் 126ஆவது ஹெலிகாப்டர் படையணியை இவை சேர்ந்த காரணத்தால் அங்கேயே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில் இவை 2022 ஆகியும் இனியும் மேம்படுத்தப்படாமல் தொடர்ந்து நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் இந்த ஆண்டிற்கான விமானப்படை தின விழாவில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மூலமாக மீண்டும் கவனத்தை ஈர்த்துள்ளன.

நிதி போதாமை இதற்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது அதாவது இந்த ஹெலிகாப்டர்களை தயாரிக்கும் ரஷ்யாவின் Rostec நிறுவனமானது இது தொடர்பாக இந்திய விமானப்படையுடன் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில் எதிர்பார்த்ததை விடவும் அதிகமான நிதி தேவைப்படும் என்பதால் இதற்கு ஒப்புதல் கிடைக்கவில்லை.

இந்த ஹெலிகாப்டர்களில் புதிய என்ஜின் மற்றும் அதிநவீன ஏவியானிக்ஸ் மற்றும் பல்வேறு இதர அமைப்புகளை பொருத்த வேண்டியுள்ளதாகவும் இந்த பிரமாண்ட ஹெலிகாப்டர்களால் சுமார் 20 ஆயிரம் கிலோ எடையை சுமக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.