இந்தியா தனது வரலாற்றில் முதல்முறையாக உள்நாட்டிலேயே வடிவமைத்து தயாரித்த தாக்குதல் ஹெலிகாப்டர் தான் HAL LCH அதாவது Hindustan Aeronautics Limited Light Combat Helicopter ஆகும்.
இன்று ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் விமானப்படை தளத்தில் நடைபெற்ற விழாவில் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், முப்படைகளின் தலைமை தளபதி ஜெனரல் அனில் சவுஹான், இந்திய விமானப்படையின் தலைமை தளபதி ஏர் சீஃப் மார்ஷல் விவேக் ராம் சவுதிரி ஆகியோர் முன்னிலையில் இவை படையில் இணைக்கப்பட்டன.
இந்த 5.8 டன்கள் எடையிலான ஹெலிகாப்டரானது பல பயன்பாட்டு திறன் கொண்டதாகும் காரணம் இதனால் பல்வேறு வகையான ஆயுதங்களை பயன்படுத்தி தாக்குதல் நடத்த முடியும், மேலும் ஸ்டெல்த் அம்சங்கள், கவச பாதுகாப்பு, இரவு தாக்குதல், வலிமையான சக்கரங்கள் போன்றவற்றை கொண்டுள்ளது.
இவற்றால் போர் களத்தில் தேடுதல் மற்றும் மீட்பு CSAR, எதிரி வான் பாதுகாப்பு அமைப்புகள் மற்றும் ஆளில்லா விமானங்களை அழித்தல் DEAD, பயங்கரவாத எதிர்ப்பு CI, பங்கர்களை அழித்தல், காடுகள் மலைகள் பாலைவனங்கள் நகரங்களிலும் திறம்பட இயங்கும் ஆற்றல் கொண்டவையாகும்
கூடுதல் சிறப்பாக இந்த ஹெலிகாப்டர்களுக்கு புதிய பெயரும் சூட்டப்பட்டு உள்ளது அதாவது இதுவரை HAL LCH என அழைக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது HAL PRACHAND “ப்ரச்சந்த்” என்ற பெயர் சூட்டப்பட்டுள்ளது இதன் பொருள் “வேகமானது மற்றும் ஆக்ரோஷமானது” என்பதாகும்.