அணு ஆயுதங்களை பயன்படுத்தினால் ரஷ்ய வீரர்களை அமெரிக்கா அழித்து விடும் முன்னாள் CIA இயக்குனர் !!
சமீபத்தில் அமெரிக்க உளவு அமைப்பான CIA வின் இயக்குனரும் ஒய்வு பெற்ற நான்கு நட்சத்திர அந்தஸ்து தரைப்படை அதிகாரியுமான ஜெனரல் டேவிட் பெட்ராயஸ் சமீபத்தில் தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டி அளித்தார்.
அந்த நிகழ்ச்சியில் அவர் ரஷ்யா அணு ஆயுதங்களை பயன்படுத்தினால் அமெரிக்கா உக்ரைனில் உள்ள ரஷ்ய வீரர்கள் அனைவரையும் அங்குள்ள அனைத்து ராணுவ தளவாடங்களையும் அடியோடு அழித்து விடும் எனவும் ரஷ்ய கடற்படையின் கருங்கடல் பிரிவையும் ஒட்டுமொத்தமாக அழித்து விடும் எனவும் பேசியுள்ளார்.
மேலும் அவர் தற்போதைய அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவன் உடன் ரஷ்யா அணு ஆயுதங்களை பயன்படுத்தினால் அதற்கு அமெரிக்காவின் பதிலடி என்னவாக இருக்கும் என்பது பற்றி பேசவில்லை ஆனால் பல மூத்த அமெரிக்க தேசிய பாதுகாப்பு அதிகாரிகள் இது தொடர்பாக தகவல்களை அவ்வப்போது தெரிவித்து வருவதாகவும் கூறினார்.
மேலும் அவர் பேசுகையில் உக்ரைனிய படைகள் ரஷ்ய படைகளை விடவும் சிறப்பாக களமிறக்கப்பட்டு உள்ளதாகவும் அவர்களுக்கு ரஷ்ய படைகளை விடவும் சிறப்பான பயிற்சி மற்றும் சிறப்பான ஆயுதங்கள் கிடைத்து உள்ளதாகவும் அதன் காரணமாக ரஷ்யா தோற்று வருவதாகவும் அதிலிருந்து ரஷ்யா மீள வாய்ப்பேயில்லை எனவும் கூறியது குறிப்பிடத்தக்கது.