பாதுகாப்பு கண்காட்சியில் 430 ராணுவ தொழில்நுட்ப அமைப்புகள் மற்றும் ஆயுதங்களை அறிமுகப்படுத்தும் DRDO !!
வருகிற 18ஆம் தேதி முதல் 22ஆம் தேதி வரை குஜராத் மாநிலம் அஹமதாபாத் நகரத்தில் இந்த ஆண்டிற்கான பாதுகாப்பு கண்காட்சி Defexpo-2022 நடைபெற உள்ளது, அதில் DRDO எனப்படும் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு சுமார் 430 வெவ்வேறு ஆயுதங்கள் மற்றும் தொழில்நுட்பங்களை அறிமுகம் செய்ய உள்ளது.
ஆத்மநிர்பார் பாரத் திட்டத்திற்கு உத்வேகம் அளிக்கும் வகையில் இந்தியாவிலேயே வடிவமைத்து தயாரிக்கப்பட்ட 430 வெவ்வேறு விதமான கடற்படை, வான்படை, தரைப்படை மற்றும் உள்நாட்டு பாதுகாப்பு சார்ந்த ஆயுதங்கள் மற்றும் தொழில்நுட்ப அமைப்புகள் அறிமுகம் செய்யப்பட உள்ளன, குறிப்பாக ரேடார்கள், சோனார்கள், ஏவுகணைகள், வானூர்திகள் ஆகியவை DRDO வால் காட்சிபடுத்தப்பட உள்ளன.
DRDO கண்காட்சி தளம் 17 பிரிவுகளை கொண்டிருக்கும் அவற்றில் என்ஜின், ஏரோஸ்பேஸ் மற்றும் ஏரோனாடிக்ஸ், கடற்படை ஆயுதங்கள் மற்றும் அமைப்புகள், சென்சார் உபகரணங்கள் மற்றும் அதிநவீன மின்னனு அமைப்புகள், கவச வாகனங்கள் மற்றும் தரைப்படை அமைப்புகள், ஆயுதங்கள் மற்றும் துப்பாக்கிகள்,
உலோகங்கள் மற்றும் ஏவுகணைகள், வீரர்களுக்கான திறன் உந்துதல் மற்றும் உதவி அமைப்புகள், மென்பொருள் மற்றும் செயற்கை அறிவாற்றல், மின்காந்த மற்றும் அகச்சிவப்பு கதிர் தாக்குதல் மற்றும் தற்காப்பு அமைப்புகள் போன்றவை சார்ந்த பல்வேறு ஆயுத அமைப்புகள் காட்சிப்படுத்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.