இந்திய கடற்படையின் அடுத்த தலைமுறை நாசகாரி கப்பலின் சிறப்பம்சங்கள் கசிவு ??

  • Tamil Defense
  • October 18, 2022
  • Comments Off on இந்திய கடற்படையின் அடுத்த தலைமுறை நாசகாரி கப்பலின் சிறப்பம்சங்கள் கசிவு ??

சமீபத்தில் இந்திய கடற்படை அடுத்த தலைமுறை போர் மேலாண்மை அமைப்பு ஒன்றை பாதுகாப்பு கண்காட்சியில் அறிமுகப்படுத்த உள்ளதாக அதை பற்றிய ஒரு காணொளி ஒன்றை வெளியிட்டது, இந்த காணொளியில் இருந்த ஒரு போர் கப்பல் பயங்கரமாக பலரின் கவனத்தை ஈர்த்தது.

அந்த காணெளியில் இருந்த அந்த போர் கப்பல் இந்திய கடற்படையில் தற்போது இல்லை ஆனால் அது எதிர்காலத்தில் இந்திய கடற்படையில் இணைய போகும் அடுத்த தலைமுறை நாசகாரி போர் கப்பல் என பாதுகாப்பு நிபுணர்கள் தெரிவித்தனர், இந்த கப்பலின் சிறப்பம்சங்கள் தான் தற்போது வெளியாகி பேசு பொருளாகி உள்ளது.

இந்த போர் கப்பலின் முன்பகுதியிலும் பின்பகுதியிலும் தலா 72 செங்குத்தாக ஏவும் பல உபயோக ஏவுகுழல் அமைப்புகள் அதாவது UVLS Universal Vertical Launching System இருக்கும், இது தவிர ரேடார் கட்டுமானத்திற்கு பின்புறம் தலா 4 வீதம் மொத்தமாக 8 சரிவான பிரம்மாஸ்-2 ஏவுகணைகளுக்கான ஏவுகுழாய் (லாஞ்சர்கள்) அமைப்புகள் இருக்கும்.

இதன் வடிவமைப்பு மிகவும் அதிகமான ஸ்டெல்த் கட்டுமானத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும், அந்த வகையில் தற்போதைய கப்பல்களை விடவும் அதிக ஸ்டெல்த் தன்மையை கொண்டிருக்கும், இதன் முழு சிறப்பம்சங்கள் 2024ல் இறுதி செய்யப்படும், 2025 அல்லது 2026ல் கட்டுமான பணிகள் துவங்கும், 2031ல் முதல் கப்பல் படையில் இணையும்.

இந்த வகையிலான ஆறு கப்பல்களும் தலா 13,000 டன்கள் எடையை கொண்டிருக்கும், இவற்றிற்கான செலவு சுமார் 50,000 கோடி ரூபாய் ஆகும். மேலும் இவற்றில் 108 அல்லது 152 ஏவுகுழாய்கள் இருக்கும் இது சீனாவின் Type055 (112 ஏவுகுழாய்கள்) மற்றும் அமெரிக்காவின் டைகான்டரோகா “Ticonderoga” (122 ஏவுகுழாய்கள்) ஆகிய கப்பல்களுக்கு இணையாக இருக்கும்.

இந்த கப்பல் வான் பாதுகாப்பு ஏவுகணைகள் மட்டுமில்லாது தொலைதூர கப்பல் எதிர்ப்பு ஏவுகணைகள் மற்றும் ஹைப்பர்சானிக் ஏவுகணைகள், நீர்மூழ்கி எதிர்ப்பு ஏவுகணைகளை கூட கொண்டிருக்கலாம் என கூறப்படுகிறது, அந்த வகையில் இந்த கப்பலின் மற்றொரு சிறப்பம்சம் வழக்கமாக இந்திய போர் கப்பல்களில் உள்ள ஸ்டெல்த் திறனை பாதிக்கும் RBU6000 எனப்படும் குறுந்தூர நீர்மூழ்கி எதிர்ப்பு ராக்கெட் அமைப்பு இதில் இல்லாததாகும்.

ஜப்பானிய அடாகோ ரக நாசகாரி கப்பல்களில் 96 ஏவுகுழாய்களும், சீன Type052D ரக நாசகாரி கப்பல்களில் 64 ஏவுகுழாய்களும் உள்ள நிலையில் அதே அளவிலான நமது கொல்கத்தா மற்றும் விசாகப்பட்டினம் ரக நாசகாரி கப்பல்களில் வெறுமனே 48 ஏவுகுழாய்கள் மட்டுமே உள்ளது கூடவே ஸ்டெல்த் திறனை பாதிக்கும் RBU-6000 அமைப்பும் இருந்தது.

இந்த அடுத்த தலைமுறை நாசகாரி கப்பலில் மேற்குறிப்பிட்ட அனைத்து குறைகளுக்கும் தீர்வு காணப்பட்ட நிலையில் RBU-6000 அமைப்பின் இல்லாமையும் ஒரு சிக்கலை ஏற்படுத்தி உள்ளது அதாவது அந்த அமைப்பு உலகிலேயே சிறந்த குறுந்தூர நீர்மூழ்கி எதிர்ப்பு அமைப்பாகும் ஆகவே அதற்கு பதிலாக ஏதேனும் அமைப்பு வருமா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.