நீரஜ் சோப்ரா வரிசையில் காமன்வெல்த் போட்டிகளில் பதக்கம் வென்ற வீராங்கனைக்கு இந்திய தரைப்படையில் பணி !!

இந்திய தரைப்படை மிஷன் ஒலிம்பிக்ஸ் எனும் திட்டத்தின்கீழ் திறமைமிக்க விளையாட்டு வீரர் வீராங்கனைகளை கண்டறிந்து ஆதரவளித்து போட்டிகளுக்கு தயார் செய்து வருகிறது.

அப்படி ஒருவர் தான் ஒலிம்பிக் போட்டியில் தங்க பதக்கம் வென்ற நீரஜ் சோப்ரா ஆவார், இவரது திறமையை கண்டறிந்த இந்திய தரைப்படை இவருக்கு பணி வழங்கியது தற்போது இவர் இந்திய தரைப்படையில் சுபேதாராக பணியமர்த்தப்பட்டு உள்ளார்.

அந்த வகையில் காமன்வெல்த் போட்டியில் பாக்ஸிங் விளையாட்டில் வெண்கல பதக்கம் வென்ற ஹரியானா மாநிலத்தை சேர்ந்த 20 வயதே ஆன ஜாஸ்மின் லம்போரியா தரைப்படை காவல்பிரிவில் ஹவில்தாராக பணியமர்த்தப்பட்டு உள்ளார்.

ஜாஸ்மின் லம்போரியா ஏற்கனவே பல தேசிய மற்றும் சர்வதேச போட்டிகளில் கலந்து கொண்டு சிறப்பாக விளையாடி உள்ளார், சம்மி எனும் வீராங்கனைக்கு பிறகு மிஷன் ஒலிம்பிக்ஸ் திட்டத்தின்கீழ் இப்படி ராணுவத்தில் இணையும் இரண்டாவது பெண் வீராங்கனை இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மிஷன் ஒலிம்பிக்ஸ் திட்டத்தின் கீழ் தான் நட்சத்திர விளையாட்டு வீரர்களான சுபேதார் நீரஜ் சோப்ரா, சுபேதார் அவினாஷ் , நாயப் சுபேதார் ஜெரமி, ஹவில்தார் அசின்டா உள்ளிட்ட இன்னும் பல விளையாட்டு வீரர்கள் ஊக்குவிக்கப்பட்டனர் என்பது கூடுதல் தகவல் ஆகும்.