தமிழ்நாட்டில் சீனர்கள் ஊடுருவல்; இலங்கை கடலோர பகுதிகளில் சீன ராணுவ நடமாட்டம் அதிகரிப்பு தமிழக உளவுத்துறை எச்சரிக்கை !!

  • Tamil Defense
  • October 18, 2022
  • Comments Off on தமிழ்நாட்டில் சீனர்கள் ஊடுருவல்; இலங்கை கடலோர பகுதிகளில் சீன ராணுவ நடமாட்டம் அதிகரிப்பு தமிழக உளவுத்துறை எச்சரிக்கை !!

கடந்த சில நாட்களுக்கு முன்னர் தமிழக உளவுத்துறை கடல்மார்க்கமாக இலங்கை அரசியல் கட்சி ஒன்றின் உதவியோடு தமிழகத்திற்குள் சீன நாட்டவர்கள் மிகவும் ரகசியமாக ஊடுருவி இருப்பதாக எச்சரிக்கை விடுத்தது.

இதற்கு அடுத்த சில நாட்களிலேயே தற்போது மீண்டும் தமிழக உளவுத்துறை இலங்கையில் சீன நடமாட்டம் அதிகரித்துள்ளதாகவும் குறிப்பாக சீன ராணுவத்தின் நடவடிக்கைகள் இலங்கையில் அதிகரித்து இருப்பதாகவும்

இது இந்தியாவின் தேசிய பாதுகாப்பிற்கு மிகப்பெரிய ஆபத்து எனவும் தமிழக உளவுத்துறை அறிக்கை வெளியிட்டு எச்சரித்துள்ளது இதை தொடர்ந்து உடனடியாக இந்நியா மற்றும் இலங்கை இடையேயான கடலோர பகுதிகளில் கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும் எனவும் மத்திய அரசு மற்றும் பாதுகாப்பு அமைச்சகத்திற்கு தமிழக அரசு கோரிக்கை விடுத்துள்ளது.

இலங்கையின் வட கடலோ பகுதிகளில் சீன ராணுவத்தினர் கடல் வெள்ளரி வளர்ப்பு எனும் போர்வையில் ஆளில்லா விமானங்கள், செயற்கைகோள் தொடர்பு மற்றும் பல்வேறு அதிநவீன தொலை தொடர்பு கருவிகளை களமிறக்கி பயன்படுத்தி வருவதாகவும் தமிழக உளவுத்துறை விடுத்த எச்சரிக்கையின் அடிப்படையில் அனைத்து கடலோர மாவட்டங்கள் மற்றும் அனைத்து நகரங்களிலும் பாதுகாப்பை அதிகப்படுத்த தமிழக அரசால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

முல்லைத்தீவு, பருத்தித்தீவு, அனலைத்தீவு, மீசாலை, சவக்கச்சேரி போன்ற பகுதிகளில் சீனர்களின் நடவடிக்கை அதிகரித்துள்ளதால் இலங்கை தமிழ் மீனவர்கள் கவலை அடைந்துள்ளனர் குறிப்பாக இது இந்தியாவுக்கு இலங்கை தமிழர்கள் உடனான தொடர்புகளில் சிக்கலை ஏற்படுத்தி விடும் எனவும் அச்சப்படுவதாக தமிழக உளவுத்துறை அறிக்கை கூறுகிறது.

தமிழக கடலோர பாதுகாப்பு குழுமத்தின் தலைவரான ஏடிஜிபி சந்தீப் மிட்டல் இலங்கையில் சீன நடமாட்டம் அதிகரித்துள்ளது மறுப்பதற்கில்லை எனவும் குறிப்பாக இந்தியா உடனான சர்வதேச கடல்சார் எல்லையோரம் உள்ள தீவுகள் வரை இலங்கைக்கான சீன தூதரின் அடிக்கடி பயணங்களும் கவலைக்குரியது எனவும்

இந்தியாவில் பயிலும் இலங்கை மாணவர்களுக்கு இந்தியா கல்வி உதவித்தொகை அளித்து வரும் நிலையில் சீனா அங்கு பயிலும் இலங்கை முதுநிலை பட்டதாரி மாணவர்களுக்கு கல்வி உதவி தொகை அளித்து வளைத்து போடும் வேலையை செய்து வருவதாகவும் இதன்மூலம் இலங்கையில் எதிர்காலத்தில் அவர்களை பயன்படுத்தி கொள்ளவும் திட்டமிட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

மேலும் அவர் பேசுகையில் சீனர்கள் மட்டுமே இந்தியாவுக்குள் ஊடுருவ வேண்டும் என்பதில்லை அவர்களால் ஆதாயம் பெற்ற அவர்களுக்காக எதையும் செய்ய துணிந்த யார் வேண்டுமானாலும் இந்தியாவுக்குள் ஊடுருவலாம் ஆகவே தமிழகத்தின் அனைத்து கடலோர மாவட்டங்களிலும் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பை அதிகபடுத்த உத்தரவிட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

தமிழக காவல்துறை வட்டார தகவல்களின்படி மத்திய அரசு கடலோர பாதுகாப்பு திட்டத்தின் மூன்றாம் கட்டத்தை உடனடியாக துவங்க வேண்டும் எனவும், 2020ஆம் ஆண்டில் இந்த திட்டத்தின் இரண்டாம் கட்டம் நிறைவடைந்த பிறகு கடலோர பாதுகாப்பு குழுமம் சார்ந்த நிதி மற்றும் உள்கட்டமைப்பு உதவிகள் மத்திய அரசிடம் இருந்து நின்று விட்டதாக கூறப்படுகிறது .

மேலும் சில மூத்த தமிழக காவல்துறை அதிகாரிகள் பேசும்போது தமிழக கடலோரத்தின் அதிக பதட்டமான ஆபத்தான பகுதிகளில் நிலைநிறுத்த ஒரு சில இந்திய கடலோர ரிசர்வ் பட்டாலியன்களை உருவாக்க மத்திய அரசு உதவ வேண்டும் எனவும் ராமேஸ்வரம் அருகே தமிழக அரசு ஒதுக்கியுள்ள 240 ஏக்கர் நிலத்தில் பிராந்திய கடலோர பாதுகாப்பு பயிற்சி அகாடமியை அமைக்க மத்திய அரசு காலம் தாழ்த்தாமல் முன்வர வேண்டும் எனவும் தெரிவித்தனர்.