ஃபிரான்ஸ் போர் விமானிகளை பணிக்கு அமர்த்தும் சீன விமானப்படை !!

  • Tamil Defense
  • October 25, 2022
  • Comments Off on ஃபிரான்ஸ் போர் விமானிகளை பணிக்கு அமர்த்தும் சீன விமானப்படை !!

ஒய்வு பெற்ற ஃபிரான்ஸ் விமானப்படையின் போர் விமானிகளை சீன மக்கள் விடுதலை ராணுவ விமானப்படை தனது போர் விமானிகளுக்கு பயிற்சி அளிக்க பணிக்கு அமர்த்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

அதிலும் குறிப்பாக ஃபிரான்ஸ் கடற்படையின் போர் விமானிகளுக்கு சீன கடற்படை அதிக முக்கியத்துவம் கொடுத்து வருவதாகவும் நல்ல சம்பளம் கொடுத்து ஈர்த்து வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

40களில் உள்ள முன்னாள் ஃபிரெஞ்சு கடற்படை போர் விமானி ஒருவருக்கு மாதம் ஒன்றிற்கு தலா 20,000 யூரோக்கள் அதாவது இந்திய மதிப்பில் 16லட்சம் ரூபாய்க்கு அதிகமாக சம்பளமாக தர சீனா முன்வந்தததாக அந்த விமானி கூறியுள்ளார்.

சீன கடற்படையானது தொடர்ந்து விமானந்தாங்கி கப்பல்கள் மற்றும் இலகுரக விமானந்தாங்கி கப்பல்களை படையில் இணைத்து வரும் நிலையில் அதிலிருந்து இயங்கும் சீன போர் விமானிகளை பயிற்றுவிக்க ஃபிரெஞ்சு விமானிகளை குறிவைத்து செயல்படுகிறது.

இதற்கு காரணம் உலகில் மூன்றே நாடுகள் தான் CATOBAR திறன் கொண்ட விமானந்தாங்கி கப்பல்களை இயக்கி வருகின்றன, அவை அமெரிக்கா, ஃபிரான்ஸ் மற்றும் சீனா ஆகும் ஆனால் அமெரிக்க விமானிகளை ஈர்ப்பது கடினம் ஆகவே ஃபிரெஞ்சு விமானிகளை சீனா குறிவைத்துள்ளது.

இதில் CATOBAR ரக விமானந்தாங்கி போர் கப்பல்களில் இருந்து போர் விமானங்களை இயக்குவது மட்டுமின்றி மேற்கத்திய வான் போர் முறை மற்றும் யுத்த தந்திரங்களை பயிற்றுவிக்கவும் இவர்களை பயன்படுத்தி கொள்ள சீனா விரும்புகிறது.

கத்தார போன்ற நாடுகள் வெளிநாட்டு போர் விமான பயிற்றுநர்களுக்கு அளிக்கும் சம்பளத்தை விட சீனர்கள் அதிக சம்பளம் தர முன்வந்ததாக பல நாடுகளில் பயிற்றுனராக பணியாற்றிய அனுபவம் கொண்ட அந்த ஃபிரெஞ்சு விமானி கூறியுள்ளார்.

மேலும் அவர் எனக்கு அவர்கள் அளித்த சம்பளத்தை பார்த்து ஆசையாக தான் இருந்தது ஆனால் எந்த பிரச்சினையிலும் சிக்கி கொள்ள விரும்பவில்லை மேலும் சீனா நட்பு நாடு அல்ல ஆகவே மறுத்தவிட்டேன் எனவும் அவர் கூறியுள்ளார், இந்த தகவல்கள் உலக அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.