விரைவில் தேஜாஸ் போர் விமான தொழிற்சாலையை பார்வையிடும் அர்ஜென்டினா குழு !!

அர்ஜென்டினா விமானப்படையின் போர் விமான தேர்வில் அமெரிக்க F-16, சீன JF-17 மற்றும் இந்திய LCA TEJAS ஆகிய மூன்று போர் விமானங்களும் போட்டியில் உள்ள நிலையில் இந்தியா இந்த ஒப்பந்தத்தை பெற தீவிரமாக முயன்று வருகிறது.

கடந்த மாதம் இந்தியாவின் HAL Hindustan Aeronautics Limited நிறுவனத்தின் விஞ்ஞானிகள் குழுவினர் மற்றும் இந்திய விமானப்படை அதிகாரிகள் அர்ஜென்டினா சென்று அந்நாட்டு விமானப்படை தளபதியை சந்தித்து தேஜாஸ் போர் விமானத்தை பற்றி விளக்கி இந்தியா வந்து பார்வையிட அழைப்பு விடுத்தனர்.

இதையடுத்து விரைவில் அர்ஜென்டினா பாதுகாப்பு அமைச்சகம் மற்றும் விமானப்படை அதிகாரிகள் அடங்கிய குழுவினர் பெங்களூர் நகரில் உள்ள தேஜாஸ் போர் விமான தொழிற்சாலை மற்றும் தேஜாஸ் போர் விமானத்தை பார்வையிட்டு அதில் பறந்து விவரங்களை சேகரிக்க வர உள்ளனர்.

இந்த ஆய்வின் போது அர்ஜென்டினா அதிகாரிகள் தேஜாஸ் போர் விமானத்திற்கான சிமுலேட்டர் பயிற்சி அமைப்புகளையும் பார்வையிட்டு அதை பற்றியும் விவரங்களை சேகரிக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.