சென்னையில் நிலைநிறுத்தப்படும் விக்ராந்த் விமானந்தாங்கி கப்பல் !!

கடந்த 2ஆம் தேதி இந்திய கடற்படையில் இணைந்த உள்நாட்டிலேயே வடிவமைத்து தயாரிக்கப்பட்ட INS Vikrant விமானந்தாங்கி போர் கப்பலானது விசாகப்பட்டினம் கடற்படை தளத்தில் இடமில்லாத காரணத்தால் சென்னையின் காட்டுபள்ளி துறைமுகத்தில் நிலைநிறுத்தப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்திய கடற்படையிடம் INS Vikramaditya மற்றும் INS Vikrant ஆகிய இரண்டு விமானந்தாங்கி போர் கப்பல்கள் உள்ளன, அதில் விக்ரமாதித்யா இந்திய கடற்படையின் மேற்கு கட்டளையகத்தின் கீழும், விக்ராந்த் கிழக்கு கட்டளையகத்தின் கீழும் இருந்து இயங்கும்.

அந்த வகையில் INS Vikramaditya விக்ரமாதித்யா மேற்கு கடலோர பகுதியில் கர்நாடக மாநிலம் கார்வார் கடற்படை தளத்தில் இருந்து இயங்கி வருகிறது, INS Vikrant விக்ராந்த் கிழக்க கடலோரத்தில் உள்ள கிழக்கு கடற்படையின் தலைமையகமான விசாகபட்டினத்தில் இருந்து இயங்க வேண்டிய நிலையில் அங்கு இடமில்லாத காரணத்தால்,

தற்போது சென்னைக்கு அருகேயுள்ள Larsen & Toubro லார்சன் அன்ட் டூப்ரோ நிறுவனத்துக்கு சொந்தமான காட்டுபள்ளி துறைமுகத்தில் விக்ராந்த் விமானந்தாங்கி கப்பலை நிலைநிறுத்த திட்டமிடப்பட்டு உள்ளது இதற்காக இந்திய கடற்படை கடந்த சில ஆண்டுகளாக L & T நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி வந்தது குறிப்பிடத்தக்கது.

பெயர் வெளியிட விரும்பாத மூத்த இந்திய கடற்படை அதிகாரிகள் இந்திய அரசின் பாதுகாப்பு கமிட்டியிடம் இந்திய கடற்படை சென்னை காட்டுபள்ளி துறைமுகத்தில் விக்ராந்த் விமானந்தாங்கி கப்பலை நிறுத்தும் திட்டம் பற்றி தகவல் அளித்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

சுமார் 262 மீட்டர் நீளம் கொண்ட விக்ராந்த் கப்பலை நிறுத்தும் அளவுக்கு நீளமான படகுத்துறை (Jetty) மற்றும் கப்பல் வர தேவையான ஆழம் ஆகியவை காட்டுபள்ளி துறைமுகத்தில் உள்ளது, அடுத்த சில ஆண்டுகளுக்கு இங்கிருந்தே கப்பலை இயக்க தேவையான அனைத்து உள்கட்டமைப்பு மற்றும் இதர வசதிகள் செய்யப்பட்டு வருவது கூடுதல் தகவல் ஆகும்.

சமீபத்தில் அமெரிக்க கடற்படைக்கு சொந்தமான சப்ளை கப்பலான USNS CHARLES DREW சால்ஸ் ட்ரூவ் மறுசீரமைப்பு மற்றும் பராமரிப்பு பணிகளுக்காக காட்டுபள்ளி துறைமுகத்திற்கு வந்தது குறிப்பிடத்தக்கது.