புதன்கிழமை அதாவது 7ஆம் தேதியன்று அமெரிக்க ராணுவ தலைமையகமான பெண்டகன் அமெரிக்க அரசு பாகிஸ்தானுக்கு சுமார் 450 மில்லியன் டாலர்கள் மதிப்பிலான F-16 போர் விமானங்கள் சார்ந்த அமைப்புகளை விற்பனை செய்ய ஒப்புதல் அளித்துள்ளதாக தெரிவித்துள்ளது.
F-16 போர் விமானங்களை தயாரிக்கும் அமெரிக்காவின் லாக்ஹீட் மார்ட்டின் நிறுவனம் தான் இந்த விற்பனையில் பிரதான விற்பனையாளராக இருக்கும் எனவும் அமெரிக்க பாதுகாப்பு அமைச்சகம் இந்த விற்பனையை மேற்பார்வை செய்யும் எனவும் பெண்டகன் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
இந்த விற்பனையின் மூலமாக பாகிஸ்தான் விமானப்படையின் F16 போர் விமானங்களை மேம்படுத்தவும் அதன் மூலம் அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு கொள்கையின் இலக்குகளை அடையவும் முடியும் என பெண்டகன் அறிக்கை கூறுகிறது.
மேலும் பாகிஸ்தான் விமானப்படை இந்த மேம்பாடுகளால் F-16 விமானங்களை நவீனபடுத்தி பயங்கரவாதத்திற்கு எதிரான போர் மற்றும் அமெரிக்க படைகளுடனான ஒருங்கிணைந்த செயல்பாடுகளை மேற்கொள்ள முடியும் எனவும் கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.