மைக்ரோசிப் தட்டுபாடு: குறைந்து வரும் ரஷ்ய ஹைப்பர்சானிக் ஏவுகணை கையிருப்பு !!

உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பு துவங்கி ஆறு மாதங்களை கடந்த நிலையில் தற்போது ரஷ்யாவின் ஏவுகணை குறிப்பாக ஹைப்பர்சானிக் ஏவுகணை கையிருப்பு வேகமாக குறைந்து கொண்டே வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

ரஷ்யா தனது ஏவுகணைகளில் முன்னர் மேற்கத்திய நாடுகளில் தயாரிக்கப்பட்ட செமி கண்டக்டர் மைக்ரோ சிப்களை பயன்படுத்தி வந்த நிலையில் தற்போது பொருளாதார தடைகள் காரணமாக அத்தகைய மைக்ரோசிப்களை வாங்க முடியாமல் திணறி வருகிறது.

தற்போது ரஷ்யா இந்த மைக்ரோ சிப் தட்டுபாட்டை சமாளிக்க குளிர்சாதன பெட்டி Fridge , கணிணிகள் போன்றவற்றில் பயன்படுத்தப்படும் மைக்ரோசிப்களை எடுத்து தனது ஏவுகணைகள் மற்றும் இதர ஆயுத அமைப்புகளில் பயன்படுத்தி வருவதாக உக்ரைன் உளவுத்துறை தெரிவித்துள்ளது.

இதனால் துல்லியமாக தாக்க கூடிய அதிநவீன ஏவுகணைகளின் பயன்பாட்டை குறைத்து கொண்டுள்ள ரஷ்யா தற்போது மேற்கத்திய அதிநவீன சிப்கள் இல்லாத துல்லியம் குறைந்த சோவியத் ஒன்றிய காலகட்டத்தில் தயாரிக்கப்பட்ட ஏவுகணைகளை அதிக அளவில் பயன்படுத்த துவங்கி உள்ளது.

ரஷ்யாவிடம் தற்போது அவன்கார்ட் Avangard, Kinzhal கின்ஸால், Zircon ஸிர்கான் ஆகிய மூன்று வகையான ஹைப்பர்சானிக் ஏவுகணைகள் உள்ளன இவை அனைத்திலும் மேற்கத்திய அல்லது ரஷ்யாவுக்கு எதிரான நிலைப்பாடு கொண்ட நாடுகளில் தயாரிக்கப்படும் மைக்ரோசிப்கள் தான் பயன்படுத்தப்படுகிறது.

இந்த நிலையில் உக்ரைன் இத்தகைய அதிமுக்கியத்துவம் வாய்ந்த Semiconductor Chips, Transformers, Connectors, Casings, Transistors, Insulators உள்ளிட்ட பல இதர முக்கியமான பொருட்களை எப்படியேனும் வாங்க தயாராகி வருவதாக உலக நாடுகளை எச்சரித்துள்ளது.

மேற்குறிப்பிட்ட அமைப்புகள் பெரும்பாலும் அமெரிக்கா, ஜெர்மனி, நெதர்லாந்து, இங்கிலாந்து, தைவான், ஜப்பான், தென் கொரியா போன்ற பல மேற்கத்திய மற்றும் மேற்கத்திய ஆதரவு நிலைப்பாடு கொண்ட நாடுகளால் தயாரிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

ஒரு வேளை ரஷ்யா மறைமுகமாக வேறு நாடுகள் (சீனா) அல்லது வேறு மறைமுக வழிகளை கையாண்டு இந்த அமைப்புகளை பெற்றால் போரின் போக்கு ரஷ்யாவின் பக்கம் திரும்ப அதிக வாய்ப்புகள் உள்ளதாகவும் அது உக்ரைனுக்கு பெருத்த அடியாக அமையும் அதனால் தான் உலக நாடுகளை உக்ரைன் கவனமாக இருக்கும்படி எச்சரித்துள்ளது எனவும் பாதுகாப்பு நிபுணர்கள் கூறுகின்றனர்.