கடந்த வியாழக்கிழமை அன்று தைவான் ராணுவம் வரலாற்றில் முதல்முறையாக தனது வான் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த சீன ஆளில்லா விமானத்தை சுட்டு வீழ்த்தியுள்ளது.
சீனாவை ஒட்டியுள்ள தைவானுடைய கின்மென் தீவின் வான் பகுதியில் சீனாவை சேர்ந்த ஆளில்லா விமானம் அத்துமீறி நுழைந்த போது அந்த தீவு பகுதியை பாதுகாக்கும் தைவான் ராணுவத்தின் கின்மென் பாதுகாப்பு கட்டளையகம் அந்த ஆளில்லா விமானத்தை தாக்கி அழித்துள்ளதாகவும் சுட்டு வீழ்த்தப்பட்டது ராணுவ ட்ரோன் அல்ல ஆனால் உளவு மற்றும் கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ள அனுப்பி வைக்கப்பட்டு இருக்கலாம் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த வியாழக்கிழமை அன்று மாலை 4 மணியளவில் கின்மென் தீவு பிரதேசத்தில் உள்ள லியோன் தீவுக்கு மேலே சீன ட்ரோன் பறக்கையில் தைவான் படையினர் முதலில் எச்சரிக்கை விடுத்தும் பலனில்லாத காரணத்தால் அந்த ஆளில்லா விமானத்தை சுட்டு வீழ்த்தியுள்ளனர்.
சீனாவின் ஆளில்லா விமானங்கள் அவ்வப்போது கின்மென் தீவு பகுதிகளில் அத்துமீறி நுழைவதும் சில நாட்கள் முன்னர் கூட கின்மென் பகுதியில் பாதுகாப்பு பணியில் இருந்த தைவான் வீரர்களை சீன ஆளில்லா விமானம் வீடியோ எடுத்ததும் அதை நோக்கி தைவான் வீரர்கள் கல்லெறிந்ததும் பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது ஆகும்.