சுகோய்30 ஒய்வு; 2045இல் 6ஆம் தலைமுறை போர் விமானம் மற்றும் உலகின் முதல் 5.5ஆம் தலைமுறை விமானம் !!

  • Tamil Defense
  • September 24, 2022
  • Comments Off on சுகோய்30 ஒய்வு; 2045இல் 6ஆம் தலைமுறை போர் விமானம் மற்றும் உலகின் முதல் 5.5ஆம் தலைமுறை விமானம் !!

இந்திய விமானப்படையின் தாக்குதல் திறனின் முதுகெலும்பாக விளங்குவது சுகோய்30 Su-30 MKI கனரக பல திறன் போர் விமானங்கள் ஆகும், 2045 ஆம் ஆண்டு வரை இவற்றை பயன்பாட்டில் வைக்கும் வகையில் இந்திய விமானப்படை அதிநவீன இந்திய ஏவியானிக்ஸ் மற்றும் ஆயுத அமைப்புகளை பொருத்தி மேம்படுத்தி வருகிறது.

ஆனால் 2045ஆம் ஆண்டிற்கு பிறகு இவற்றை படையில் இருந்து விலக்கி ஒய்வு கொடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது, ஆகவே சுகோய்-30 போர் விமானங்கள் ஒய்வு பெறும்போது முழுக்க முழுக்க இந்தியாவிலேயே வடிவமைக்கப்பட்டு தயாரிக்கப்பட்ட ஆறாம் தலைமுறை போர் விமானங்கள் படையில் இணையும்.

தற்போது இந்தியா ஐந்தாம் தலைமுறை ஆம்கா AMCA போர் விமானத்தை தயாரிப்பதில் கவனம் செலுத்தி வரும் நிலையில் 2030ஆம் ஆண்டு முதல் ஆறாம் தலைமுறை போர் விமான திட்டத்திலும் கவனம் செலுத்தப்படும் அப்போது தான் 2045ஆம் ஆண்டு வாக்கில் அவை படையில் இணையும் என கூறப்படுகிறது.

ஏற்கனவே அமெரிக்கா, சீனா மற்றும் சில ஐரோப்பிய நாடுகள் ஆறாம் தலைமுறை போர் விமான திட்டங்களில் ஈடுபட்டு வருகின்றன அந்த விமானங்கள் 2035-2040 வாக்கில் தயாரிப்பு நிலையை எட்டும் என கூறப்படும் நிலையில் இந்தியா தனது கனவை நனவாக்க 2030 வாக்கில் முதல்கட்ட பணிகளை துவங்க வேண்டியது காலத்தின் கட்டாயம்.

அதே சமயம் தற்போது உருவாக்கப்பட்டு வரும் ஐந்தாம் தலைமுறை ஆம்கா போர் விமானமானது தயாரிப்பு நிலையை எட்டும் போது பல்வேறு அதிநவீன தொழில்நுட்பங்கள் காரணமாக இன்றைய ஐந்தாம் தலைமுறை விமானங்களை விடவும் மேம்பட்ட விமானமாக தெளிவாக கூறினால் உலகின் முதல் 5.5 ஆம் தலைமுறை விமானமாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒரு மூத்த விஞ்ஞானி கூறும்போது இந்திய விமானப்படையின் ஆறாம் தலைமுறை போர் விமானத்தில் எத்தகைய தொழில்நுட்பங்கள் இருக்க வேண்டும் என்பதை கதற்போது கணிக்க முடியாது ஆனால் பல்வேறு அதிநவீன தொழில்நுட்பங்கள் குறித்து ஆய்வு செய்து வருகிறோம், AI Artificial Intelligence செயற்கை அறிவாற்றல் மற்றும் Hybrid என்ஜின் தொழில்நுட்பம் ஆகியவை இவற்றின் தவிர்க்க முடியாத அம்சங்களாக இருக்கும் என குறிப்பிட்டார்.