ரஷ்ய படைகள் உக்ரைனுடைய தெற்கு பகுதியில் உள்ள மைகலோவ் பகுதிக்கு அருகே அமைந்துள்ள பிவெடென்னோக்ரயன்ஸ்க் அணுமின் நிலையத்தின் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.
அணு உலையில் இருந்து வெறும் 300 மீட்டர் தொலைவில் ரஷ்யர்கள் ஏவிய குண்டு வெடித்துள்ளது ஆனால் அதிர்ஷ்டவசமாக அணு உலைக்கு பாதிப்பு ஏதும் ஏற்படவில்லை என உக்ரைனுடைய அணுசக்தி நிறுவனமான Energoatom எனர்ஜோஆடம் தகவல் வெளியிட்டுள்ளது.
பிவெடென்னோக்ரயன்ஸ்க் அணு மின் நிலையத்தின் மூன்று அணு உலைகளும் தொடர்ந்து இயங்கி வருவதாகவும், அணுமின் நிலைய ஊழியர்கள் யாருக்கும் பாதிப்பு இல்லை எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதுபற்றி உக்ரைனிய அதிபர் வோலோடீமீர் செலன்ஸ்கி வெளியிட்ட அறிக்கையில் அணுமின் நிலையம் என்றால் என்ன என்பதை ரஷ்யர்கள் மறந்துவிட்டனர், உலகத்திற்கே ஆபத்து விளைவிக்கும் முன்னர் அவர்கள் தடுக்கப்பட வேண்டும் என கூறியுள்ளார்.
இந்த மாத ஆரம்பத்தில் ரஷ்ய படைகள் ஐரோப்பாவின் மிகப்பெரிய அணுமின் நிலையமான உக்ரைனுடைய ஸப்ரோஸியா அணுமின் நிலையம் மீது கடுமையான தாக்குதல் நடத்தியது குறிப்பிடத்தக்கது.