அமெரிக்காவின் நியூயார்க் நகரத்தில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் சபை தலைமையகத்தில் 77ஆவது ஐக்கிய நாடுகள் பொது சபையின் பொதுக்கூட்டம் நடைபெற்று வருகிறது, இதில் பல உலக தலைவர்களும் கலந்து கொள்கின்றனர்.
அந்த வகையில் கலந்து கொண்டு பேசிய ரஷ்ய வெளியுறவு துறை அமைச்சர் செர்கே லாவ்ரோவ் ரஷ்யா இந்தியா ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பு நாடாக தனது ஆதரவை அளிப்பதாக அறிவித்தார்.
இந்தியா ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பு நாடாக அனைத்து தகுதிகளையும் கொண்டுள்ளதாகவும், உலகளாவிய விவகாரங்களில் இந்தியா முக்கிய பங்காற்றி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும் பிரேசில் பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பு நாடாகவும் ரஷ்யா ஆதரவு தெரிவிப்பதாகவும் அதே நேரத்தில் ஆஃப்பிரிக்கா கண்டத்தின் நிலையை ஒருமனதாக கண்டிப்பாக உயர்த்த வேண்டியது அவசியம் எனவும் கூறினார்.
இதற்கு மேலும் வலுசேர்க்கும் வகையில் இந்தியாவுக்கான ரஷ்ய தூதர் டெனிஸ் அலிபோவ் ரஷ்யா, ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் இந்தியா நிரந்தர உறுப்பு நாடாக கடந்த காலத்திலும் ஆதரவு தெரிவித்து வந்ததாகவும் இனியும் ஆதரவு அளிப்போம் எனவும் பேசியுள்ளார்.