ரஷ்யாவில் கட்டாய ராணுவ ஆட்சேர்ப்புக்கு உத்தரவிட்ட அதிபர் புடின் அதில் ஏற்பட்டுள்ள சிக்கல்கள் !!

  • Tamil Defense
  • September 26, 2022
  • Comments Off on ரஷ்யாவில் கட்டாய ராணுவ ஆட்சேர்ப்புக்கு உத்தரவிட்ட அதிபர் புடின் அதில் ஏற்பட்டுள்ள சிக்கல்கள் !!

கடந்த ஆறு மாத காலமாக ரஷ்யா உக்ரைன் இடையேயான போர் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் ரஷ்ய படைகள் உக்ரைனில் நினைத்த அளவுக்கான வெற்றியை பெறவில்லை பல முன்னனிகளில் தடுமாறி வருகின்றன.

இந்த நிலையில் கடந்த புதன்கிழமை அன்று ரஷ்ய அதிபர் விளாடிமீர் புடின் உடல்தகுதி , தேவையான திறன்கள் மற்றும் ராணுவ அனுபவம் கொண்ட அனைத்து ரஷ்யர்களும் படையில் இணையும்படி உத்தரவிட்டார்.

இதை தொடர்ந்து பல ஆயிரம் ரஷ்ய இளைஞர்கள் இதிலிருந்து தப்பிக்கும் வகையில் ரஷ்யாவில் இருந்து வெளியேறி வருவதாக தகவல்கள் வெளியான நிலையில் இந்த கட்டாய ஆட்சேர்ப்பில் பல்வேறு குளறுபடிகள் உள்ளதாக தெரிய வந்துள்ளது.

அதாவது வயதானவர்கள் மற்றும் உடல்நிலை சரியில்லாதவர்களை கூட ராணுவ ஆட்சேர்ப்பிற்கு வருமாறு அரசு அதிகாரிகள் பணித்து வருவது ரஷ்ய மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

ரஷ்யாவின் வோல்கோகிராட் பகுதியில் 63 வயதான ஒய்வு பெற்ற உடல்நிலை சரியில்லாத முன்னாள் ராணுவ வீரரை ராணுவ ஆட்சேர்ப்பு முகாமிற்கு கொண்டு சென்ற நிலையில் சமுக வலைதளத்தில் அவரது மகள் காணொளி வெளியிட்டார் இதனை தொடர்ந்து தற்போது அவர் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

அதே போல அதே பகுதியை சேர்ந்த துளியும் ராணுவ அனுபவம் இல்லாத பள்ளிக்கூட இயக்குனர் அலெக்சாண்டர் ஃபால்டினுக்கு ராணுவத்தில் இணையும்படி அரசு அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.

அதேபோல எந்த விதமான ராணுவ அனுபவமும் இல்லாத செவிலியர்கள் மற்றும் மருத்துவச்சிகளை கூட அதிகாரிகள் கட்டாய ராணுவ ஆட்சேர்ப்பில் பங்கு பெற செய்துள்ள நிலையில் ரஷ்ய பாராளுமன்ற மேலவை சபாநாயகர், பல மாகாண ஆளனர்கள் மற்றும் ரஷ்ய மனித உரிமைகள் அமைப்பின் தலைவர் ஆகியோர் எந்தவித குளறுபடியும் இன்றி திட்டத்தை செயல்படுத்த கோரிக்கை விடுத்துள்ளனர்.