தென் கொரியாவுக்கு அமெரிக்க துணை ஜனாதிபதி பயணம், அணு ஆயுத ஏவுகணை சோதனை நடத்திய வட கொரியா !!

விரைவில் அமெரிக்க துணை ஜனாதிபதி கமலா ஹாரீஸ் தென்கொரியா செல்ல உள்ளார், தொடர்ந்து தென்கொரிய படைகளுடன் இணைந்து அமெரிக்க படைகளும் குறிப்பாக அமெரிக்க விமானந்தாங்கி கப்பலும் போர் பயிற்சி மேற்கொள்ள உள்ளனர்.

இந்த நிலையில் வட கொரியா அந்நாட்டின் வடக்கு பியோங்கான் மாகாணத்தில் உள்ள டெச்சான் பகுதியில் இருந்து ஒரு குறைந்து தூரம் சென்று தாக்கக்கூடிய அணு ஆயுத ஏவுகணை ஒன்றினை ஏவி சோதனை நடத்தியுள்ளது.

60 கிலோமீட்டர் உயரத்தில் 600 கிலோமீட்டர் தொலைவுக்கு சுமார் மாக் 5 அதாவது மணிக்கு 5000 கிலோமீட்டருக்கும் அதிகமான வேகத்தில் பறந்துள்ளது, இதையடுத்து தென்கொரிய முப்படை தலைமை தளபதி கொரிய தீபகற்ப பகுதியின் அமைதியை சீர்குலைக்கும் வகையில் வடகொரியாவின் செயல்பாடு உள்ளதாக கூறியுள்ளார்.

தொடர்ந்து தென்கொரிய முப்படை தலைமை தளபதி கிம் சியூங் கியூம் மற்றும் கொரியாவில் உள்ள அமெரிக்க படைகளின் தளபதி பால் லாகமெரா ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர், தென்கொரிய தேசிய பாதுகாப்பு கவுன்சிலும் அவசரமாக சந்திப்பு நடத்தியது குறிப்பிடத்தக்கது.