தாவூத் இப்ராஹீம் பற்றி தகவல் அளித்தால் 25 லட்சம் பரிசு அறிவித்த இந்தியா !!

இந்தியாவின் தேசிய புலனாய்வு முகமை NIA – National Investigation Agency நிழல் உலக தாதாவும் பல பயங்கரவாத தாக்குதல்களில் தொடர்பு உடையனுமான தாவூத் இப்ராஹீம் பற்றி தகவல் அளிப்போருக்கு 25 லட்ச ரூபாய் பரிசு அறிவித்துள்ளது.

இந்த பரிசு பண நடவடிக்கை தாவூத் இப்ராஹிம் குழுவினர் D Gang எனும் கும்பலை உருவாக்கி பாகிஸ்தானிய அமைப்புகளுடன் இணைந்து இந்தியாவில் பயங்கரவாத தாக்குதல் நடத்துவது, போலி ரூபாய் நோட்டுகள், போதை மருந்து, ஆயுதங்கள் மற்றும் வெடி மருந்துகளை கடத்துவது போன்ற சட்ட விரோத சமுக விரோத செயல்களை செய்து வந்த வழக்கு தொடர்பானதாகும்.

தாவூத் இப்ராஹீம் தவிர அவனது சகோதரன் அனீஸ் இப்ராஹீம் என்கிற ஹாஜி அனீஸ், மற்றும் நெருங்கிய கூட்டாளிகளான ஜாவேத் பட்டேல் என்கிற ஜாவேத் சிக்னா, ஷகில் ஷேக் என்கிற சோட்டா ஷகில், இப்ராஹீம் முஷ்தாக் அப்துல் ரஸ்ஸாக் மேமன் என்கிற டைகர் மேமன் ஆகியோர் பற்றி தகவல் அளிப்போருக்கும் பரிசு பணம் அறிவிக்கப்பட்டுள்ளது.

தாவூத் இப்ராஹீமிற்கு 25 லட்சம் அறிவிக்கப்பட்ட நிலையில் அவனது சகோதரன் ஹாஜி அனீஸிற்கு 15 லட்சமும், சோட்டா ஷகிலுக்கு 20 லட்சமும், ஜாவேத் சிக்னா மற்றும் டைகர் மேமன் ஆகியோருக்கு தலா 15 லட்சமும் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தாவூத் இப்ராஹீம் மற்றும் அவனது கும்பல் இந்தியாவில் 1993 குண்டுவெடிப்பு நிகழ்த்தியதும், 2008 தாக்குதலுக்கு உதவியவர்கள் என்பதும் அல் காய்தா, லஷ்கர் இ தொய்பா, ஜெய்ஷ் இ மொஹம்மது உள்ளிட்ட பயங்கரவாத இயக்கங்களுடன் நெருங்கிய தொடர்பு கொன்டவர்கள், அமெரிக்காவின் தேடப்படும் குற்றவாளிகள் பட்டியலில் மூன்றாவது இடத்தில் இருக்கிறான் என்பதும் குறிப்பிடத்தக்கது.