இந்தியா தனது கடற்படைக்கு P-75i திட்டத்தின்கீழ் 6 டீசல் எலெக்ட்ரிக் வெளிநாட்டு நீர்மூழ்கி கப்பல்களை பெற திட்டமிட்டு வரும் அதே நேரத்தில் 12 டீசல் எலெக்ட்ரிக் தாக்குதல் நீர்மூழ்கி கப்பல்களை உள்நாட்டிலேயே வடிவமைத்து தயாரிக்கவும் விரும்பி செயல்பட்டு வருகிறது.
இதன்படி Project-76 (P-76) திட்டம் 76ன் கீழ் இந்திய கடற்படைக்கென 12 அடுத்த தலைமுறை அதிநவீன டீசல் எலெக்ட்ரிக் தாக்குதல் நீர்மூழ்கி கப்பல்களை கட்டும் பணி மும்பையில் உள்ள MDL- Mazagon Docks Limited கப்பல் கட்டுமான தளத்திடம் ஒப்படைக்கப்படும் என பாதுகாப்பு அமைச்சக வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கு காரணம் மும்பை MDL கப்பல் கட்டுமான தள நிறுவனம் ஒன்று தான் நாட்டிலேயே அதிகபட்சமாக சுமார் 8 நீர்மூழ்கி கப்பல்களை உள்நாட்டிலேயே கட்டமைத்த அனுபவம் வாய்ந்தது என்பதாகும், ஆகவே இந்த அடுத்த தலைமுறை கப்பல்களுக்கு தேவையான பல அதிநவீன தொழில்நுட்பங்கள் மற்றும் அமைப்புகளை இப்போதே தயார் செய்து வைக்க MDL நிறுவனத்திற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இவற்றில் Li-Ion லித்தியம் ஐயான் பேட்டரிகள், டீசல் ஜெனரேட்டர்கள், ரேடியோ (தகவல் தொடர்பு), வழிகாட்டி அமைப்புகள், சத்தமில்லா அதிநவீன Pumpjet Propulsion போன்றவை இந்த பட்டியலில் உள்ளடங்கும் என கூறப்படுகிறது, இவற்றை 2026வாக்கில் தயாராக வைக்க பாதுகாப்பு அமைச்சகம் விரும்புகிறது அப்போது தான் தடங்கல் இன்றி 2030க்குள் மேற்குறிப்பிட்ட நீர்மூழ்கிகளின் கட்டுமான பணிகளை துவங்கி விரைவாக முடிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.