இந்திய கடற்படையின் ஒன்பது எதிர்கால சுதேசி கப்பல் திட்டங்கள் !!

  • Tamil Defense
  • September 14, 2022
  • Comments Off on இந்திய கடற்படையின் ஒன்பது எதிர்கால சுதேசி கப்பல் திட்டங்கள் !!

சீன கடற்படை பசிஃபிக் மற்றும் இந்திய பெருங்கடல் பகுதிகளில் தனது ஆதிக்கத்தை விரிவுபடுத்தவும் நிலைநாட்டவும் தீவிரமாக செயல்பட்டு வரும் நேரத்தில் இந்திய கடற்படையும் சுதாரித்துள்ளது, தனது பலத்தை அதிகபடுத்தி கொள்ள தீவிரமாக நடவடிக்கை எடுத்து வருவதை சமீப காலமாக பார்க்க முடிகிறது.

இந்திய பெருங்கடல் பகுதி இந்தியா மற்றும் சீனா இடையேயான போர் களமாக மாறும் சூழலை எதிர்கொள்ள இந்திய கடற்படை 9 எதிர்கால சுதேசி கப்பல் கட்டுமான கொள்முதல் திட்டங்களை அறிவித்துள்ளது, இவற்றில் ஒன்று போர் கப்பல் அல்ல என்பது குறிப்பிடத்தக்கது.

1) New Cadet Training Ship;
இது இந்திய கடற்படையின் அதிகாரிகள் மற்றும் வீரர்களை கடல்சார் சூழல்கள், கப்பல் இயக்கம் ஆகியவற்றில் பயிற்றுவிப்பதற்காக மூன்று உள்நாட்டிலேயே வடிவமைத்து தயாரிக்கப்பட்ட பயிற்சி கப்பல்களை வாங்கும் திட்டமாகும், இவற்றை போரில் ஈடுபடுத்த முடியாது.

2) NGOPV;
Next Generation Offshore Patrol Vessels எனப்படும் இந்த அடுத்த தலைமுறை கடலோர ரோந்து கலன்களில் ஆறினை இந்திய கப்பல் கட்டுமான நிறுவனங்களிடம் இருந்தே கொள்முதல் செய்ய திட்டமிடப்பட்டு உள்ளது, இவற்றை கடலோர பாதுகாப்பு, ரோந்து, இடைமறிப்பு, தேடுதல் மற்றும் மீட்பு, கண்காணிப்பு, VBSS கப்பலேறி சோதனை மற்றும் கைது பறிமுதல் நடவடிக்கை, கடல்சார் கண்ணிவெடி போரியல், சிறப்பு படைகள் உதவி போன்ற பணிகளில் பயன்படுத்தி கொள்ள முடியும்.

3) MCMV;
Mine Counter Measure Vessels கடல்சார் கண்ணிவெடி எதிர்ப்பு கலன்கள், கடந்த 2019ஆம் ஆண்டு முதலே இத்தகைய கலன்களை படையில் இணைக்க முயற்சி நடைபெற்று தோல்வி அடைந்து வருவது தெரிந்ததே, அனைத்து வகையான கடல்சார் கண்ணிவெடிகளை செயலிழக்க வைக்கும் திறன் கொண்ட 800 டன்கள் எடையிலான 12 கலன்களை கோவா கப்பல் கட்டுமான தளத்தில் கட்ட திட்டம் தற்போது வகுக்கப்பட்டு உள்ளது

4) NGC;
Next Generation Corvettes அடுத்த தலைமுறை கார்வெட் ரக கப்பல்கள் இவற்றை உள்நாட்டிலேயே வடிவமைத்து தயாரித்து தற்போது இந்திய கடற்படையில் உள்ள கோரா மற்றும் குக்ரி ரக கார்வெட் கப்பல்களுக்கு மாற்றாக படையில் இணைக்க திட்டமிடப்பட்டு உள்ளது.

5) NGMV;
Next Generation Missile Vessels அடுத்த தலைமுறை ஏவுகணை கலன்கள் அதிநவீன பிரம்மாஸ் கப்பல் எதிர்ப்பு ஏவுகணைகளை சுமக்கக்கூடிய இத்தகைய ஆறு கலன்களை கொச்சி கப்பல் கட்டுமான தளம் கட்டமைத்து அடுத்த ஐந்து ஆண்டுகளில் இந்திய கடற்படைக்கு டெலிவரி செய்ய உள்ளது.

7) Fleet Support Ships; படையணி உதவி கப்பல்கள் சுமார் 45,000 டன்கள் எடை கொண்ட இத்தகைய ஐந்து பிரமாண்ட கப்பல்களை விசாகப்பட்டினம் ஹிந்துஸ்தான் கப்பல் கட்டுமான தளம், HSL Hindustan Shipyards Limited நிறுவனம் கட்டமைத்து டெலிவரி செய்ய உள்ளது, முதல் கப்பல் 2024ஆம் ஆண்டு படையில் இணையும் இவை ஆயுதங்கள், எரிபொருள், உணவு, உதிரி பாகங்கள் ஆகியற்றை சுமக்கும்.

7) LPD;
Landing Platform Dock நிலநீர் போர்முறை கப்பல்கள் இத்தகைய இரண்டு கப்பல்களை படையில் இணைக்க இந்திய கடற்படை விரும்புகிறது, அமைதி காலத்தில் மனிதாபிமான உதவிகள், பேரிடர் உதவி மற்றும் போர் காலத்தில் எதிரி கடற்கரையை கைபற்ற அல்லது நமது கைபற்றப்பட்ட தீவுகளை மீட்க நமது வீரர்கள் மற்றும் டாங்கிகளை கடல் மார்க்கமாக களமிறக்குவது ஆகிய பணிகளுக்கு பயன்படுத்த முடியும்.

8) NGD;
Next Generation Destroyers அடுத்த தலைமுறை நாசகாரி போர் கப்பல்கள், 2025ஆம் ஆண்டு முதல் இத்தகைய ஐந்து கப்பல்களை முதற்கட்டமாகவும் அடுத்த கட்டத்தில் மேலும் ஐந்து கப்பல்களை இந்திய கடற்படை படையில் இணைக்க விரும்புகிறது,தற்போது பயன்பாட்டில் உள்ள நாசகாரி கப்பல்களை விட இரண்டு மடங்கு பெரிதாக ஒவ்வொரு கப்பலும் தலா 13,000 டன்கள் எடை கொண்டவயாக இருக்கும், இந்த கப்பல்களில் அடுத்த தலைமுறை ஆயுதங்கள், தொழில்நுட்ப வசதிகள் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

9) Project – 75 India;
இந்திய கடற்படை 6 அடுத்த தலைமுறை டீசல் எலெக்ட்ரிக் தாக்குதல் நீர்மூழ்கி கப்பல்களை ஒரு வெளிநாட்டு நிறுவனத்தின் உதவியோடு அதாவது தொழில்நுட்ப பரிமாற்ற அடிப்படையில் இந்தியாவிலேயே கட்டமைக்க விரும்புகிறது, இந்திய வரலாற்றில் இது தான் கடைசியாக வெளிநாட்டு பங்களிப்புடன் கட்டப்படும் நீர்மூழ்கி திட்டமாக இருக்கும் அதற்கு பிறகு அனைத்து நீர்மூழ்கி கப்பல்களும் முழுக்க முழுக்க இந்தியாவில் வடிவமைத்து தயாரிக்கப்படுபவை ஆக இருக்கும், அந்த வகையில் முதல்கட்டமாக உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்ட 12 நீர்மூழ்கி கப்பல்கள் கட்டப்படும் என்பது கூடுதல் தகவல் ஆகும்.