ரஷ்யாவின் புதிய வெளியுறவு கொள்கை; இந்தியா சீனாவுடன் நெருக்கம் காட்டும் புடின் !!

ரஷ்ய அதிபர் விளாடிமீர் புடின் ரஷ்ய உலகம் அதாவது ரஷ்யா சார்ந்த உலகம் என்ற இலக்கை அடிப்படையாக கொண்ட புதிய வெளியுறவு கொள்கை ஒன்றை வகுத்துள்ளதாகவும் இந்த கொள்கையின்படி இந்தியா மற்றும் சீனாவுடன் அதிகமாக நெருக்கம் காட்டுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஒரு 31 பக்க மனிதாபிமான கொள்கை ஒன்று ரஷ்ய அரசால் வெளியிடப்பட்டுள்ளது, இது கடந்த ஆறு மாத காலமாக நடைபெற்று வரும் உக்ரைன் போர் சார்ந்த ஆய்வு பற்றியது, ரஷ்யாவின் நம்பிக்கைகள் மற்றும் பாரம்பரியத்தை பாதுகாப்பது தலையாய கடமை என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

1991ல் சோவியத் ஒன்றியம் உடைந்த போது பிரிந்து போன நாடுகளில் இன்று வரை வாழும் சுமார் 25 மில்லியன் ரஷ்யர்களுடன் ரஷ்ய அரசு உறவை ஏற்படுத்தி கொள்ள வேண்டும் எனவும்

மேற்குறிப்பிட்ட 25 மில்லியன் ரஷ்யர்கள் வாழும் பால்டிக் பகுதி முதல் மத்திய ஆசியா வரை உள்ள அனைத்து முன்னாள் சோவியத் ஒன்றிய நாடுகளையும் ரஷ்யா தனது ஆதிக்கம் செலுத்தும் பகுதிகளாக கருதுகிறது.

அந்த வகையில் ஜார்ஜியாவில் இருந்து கடந்த 2008ஆம் ஆண்டு பிரிந்த ரஷ்ய ஆதரவு பகுதிகளான அப்காஸியா , ஒஸெஷியா மற்றும் உக்ரைனின் டோனேட்ஸ்க் மற்றும் லுஹான்ஸ்க் பகுதிகளுடன் ரஷ்ய அரசு தனது உறவை பலப்படுத்தி கொள்ள வேண்டும் எனவும்

மேலும் இந்த புதிய கொள்கையின்படி அனைத்து ஸ்லாவிக் நாடுகள், இந்தியா, சீனா, மத்திய கிழக்கு, தென் அமெரிக்கா மற்றும் ஆப்பிரிக்க நாடுகளுடனான உறவுகளை வலுப்படுத்தி ஒத்துழைப்பினை அதிகப்படுத்த வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.