பிரம்மாஸ் ஏவுகணைகளுக்கான முதலாவது சுதேசி பூஸ்டர்கள் டெலிவரி !!

  • Tamil Defense
  • September 30, 2022
  • Comments Off on பிரம்மாஸ் ஏவுகணைகளுக்கான முதலாவது சுதேசி பூஸ்டர்கள் டெலிவரி !!

மஹாராஷ்டிரா மாநிலம் நாக்பூரை தலைமையகமாக கொண்டு இயங்கி வரும் Solar Group குழுமத்தின் பாதுகாப்பு தயாரிப்பு பிரிவான Economic Explosives Limited (EEL) எனும் நிறுவனம் முதல்முறையாக இந்தியாவிலேயே உருவாக்கப்பட்ட பிரம்மாஸ் ஏவுகணைகளுக்கான பூஸ்டர் அமைப்புகளை டெலிவரி செய்துள்ளது.

Brahmos Aerospace Private Limited BAPL நிறுவனத்திடம் இந்த ஏவுகணைகளுக்கான முதல் இரண்டு பூஸ்டர் அமைப்புகளை மேற்குறிப்பிட்ட Economic Explosives Limited நிறுவனம் ஒப்படைத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன, இதுவரை இதற்கு ரஷ்யாவை நம்பியிருக்க வேண்டிய நிலை இருந்தது இனி அந்த நிலை முற்றிலும் மாறிவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.

முதல்கட்டமாக EEL நிறுவனமானது இத்தகைய 20 பூஸ்டர்களை தயாரித்து வழங்குவதற்கான ஆர்டரை பெற்று கொண்ட நிலையில் BAPL நிறுவனத்தின் மேலாண் இயக்குனர் அஜித் ராணே தங்களுக்கு மேலும் அதிகமான தேவை இருப்பதாகவும் ஒரு மாதத்திற்கு மட்டுமே 8 பூஸ்டர்கள் தேவைப்படும் எனவும் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

மேலும் பேசும்போது முன்னர் ரஷ்யாவில் இருந்து பூஸ்டர், சீக்கர், Sustainer Engine ஆகியவை இறக்குமதி செய்யப்பட்ட நிலையில் தற்போது அவற்றில் பூஸ்டர் இந்திய மயமாக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தார்.

BAPL நிறுவனத்தின் தொழிற்சாலைகள் நாக்பூர் மற்றும் ஹைதராபாத் நகரங்களில் அமைந்துள்ளன, இந்த நிறுவனம் தற்போது உள்ள பிரம்மாஸ் ஏவுகணைகளை விடவும் அளவில் சிறிய ஆனால் சுமார் 300 கிலோமீட்டர் தூரம் பாய்ந்து செல்லக்கூடிய பிரம்மாஸ் ஏவுகணையை உருவாக்கும் பணியில் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சோலார் குழுமத்தின் தலைவர் சத்யநாராயன் நுவால் பேசும்போது தங்களது EEL நிறுவனமானது அடுத்தக்கட்டமாக பிரம்மாஸ் ஏவுகணைகளுக்கான Warhead அதாவது வெடிமருந்தை தயாரிக்கும் பணியை மேற்கொள்ள ஆர்வமாக உள்ளதாகவும் , 2018ஆம் ஆண்டு பூஸ்டர்களை தயாரிப்பதற்கான தொழில்நுட்ப பரிமாற்றத்தை பெற்ற நிலையில் இந்த ஏப்ரல் மாதம் ரஷ்ய ஒப்புதலையும் பெற்று டெலிவரி செய்துள்ளதாக தெரிவித்தார்.