உலகின் மிகப்பெரிய தாக்குதல் கப்பல்களை கட்ட ஜப்பான் திட்டம் சீனாவுக்கு செக் !!

ஜப்பான் சீனாவுக்கு செக் வைக்கும் விதமாக தனது கடற்படைக்கு AEGIS ரேடார்களை கொண்ட உலகின் மிகப்பெரிய இரண்டு அதிநவீன ஏவுகணை தாக்குதல் கப்பல்களை கட்ட முடிவு செய்துள்ளதாக அறிவித்துள்ளது.

முன்னர் ஜப்பான் அகிடா மற்றும் யாமகூச்சி மாகாணங்களில் இரண்டு AEGIS ரேடார்களை கொண்ட பலிஸ்டிக் ஏவுகணை தடுப்பு அமைப்புகளை நிறுவ திட்டமிட்டு இருந்தது, இந்த நிலையில் அந்த முடிவில் 2020ஆம் ஆண்டு மாற்றம் நிகழ்ந்தது.

அந்த ஆண்டிலேயே AEGIS ரேடார் திறன்களை கொண்ட இரண்டு பிரமாண்ட ஏவுகணை தாக்குதல் போர் கப்பல்களை கட்ட முடிவானது, இவை ஒவ்வொன்றும் தலா 20000 டன்கள் எடை கொண்டவையாக 210 மீட்டர் நீளம் மற்றும் 40 மீட்டர் அகலத்துடன் காணப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இவை ஜப்பான் கடற்படையிலேயே ஏற்கனவே உள்ள 19000 டன்கள் எடை கொண்ட இசுமோ ரக விமானந்தாங்கி கப்பல்களை விடவும் பெரியதாக இருக்கும் மட்டுமின்றி உலகிலேயே மிகப்பெரிய தாக்குதல் கப்பல்களாகவும் இவை திகழும்

குறிப்பாக தற்போது உலகின் மிகப்பெரிய ஏவுகணை கப்பல்களான சீனாவின் Type055 மற்றும் தென்கொரியாவின் செஜாங் தி கிரேட் ஆகியவற்றை விடவும் பன்மடங்கு பெரியதாகும் இவ்வளவு பெரிதாக இருந்தாலும் இந்த கப்பலில் 110 வீரர்கள் தான் இருப்பர் ஆனால் நமது 8000 டன்கள் எடை கொண்ட விசாகப்பட்டினம் நாசகாரி கப்பல்களுக்கே 315 வீரர்கள் தேவைப்படுகிறது.

இந்தளவுக்கு குறைவான வீரர்களை கொண்டு இவ்வளவு பெரிய கப்பலை இயக்க காரணம் அதிக அளவில் அல்ல உச்சத்தை தொட்டிருக்கும் தெழில்நுட்பங்கள் தான் இதன் காரணமாக பல வேலைகள் மனித பங்களிப்பு இன்றி நடைபெறும் இந்த கப்பல்கள் ஹைப்பர்சானிக் மற்றும் பலிஸ்டிக் ஆயுதங்களை எதிர்கொண்டு வீழ்த்தும் திறன் கொண்டவையாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

2027ஆம் ஆண்டில் முதல் கப்பலும், 2028ஆம் ஆண்டில் இரண்டாவது கப்பலும் படையில் இணைக்கப்படும் 2023ஆம் ஆண்டு பாராளுமன்ற ஒப்புதல் பெற்று 2024ஆம் ஆண்டு கட்டுமான பணிகள் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது, இந்த கப்பல்கள், தொலைதூர எதிர் தாக்குதல் க்ரூஸ் ஏவுகணைகள் ஆகியவற்றை கொள்முதல் செய்ய ஜப்பான் பாதுகாப்பு அமைச்சகம் வரலாற்றில் இல்லாத அளவுக்கு இம்முறை 40 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பிலான நிதி ஒதுக்கீட்டை கோரியுள்ளது.