ஜப்பான் அரசு கிழக்கு சீன கடல் பகுதியில் தைவானுக்கு நெருக்கமாக அமைந்துள்ள நான்செய் தீவுகளில் எரிபொருள் மற்றும் ஆயுத கிடங்குளை அதிகரிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இது பற்றி ஜப்பான் பாதுகாப்பு அமைச்சர் ஹமாடா யாசுகாசு செப்டம்பர் 6ஆம் தேதி பேசும்போது ஜப்பானை பாதுகாக்க போர் விமானங்கள், போர் கப்பல்கள் தேவை ஆனால் அவற்றிற்கான ஆயுதங்களும் அதிக அளவில் தேவை அதற்காக எதையும் செய்வோம் என்றார்.
ஜப்பான் தற்போது தைவானில் இருந்து சுமார் 2000 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஹோக்காய்டோ பகுதியில் தான் தனது 70 சதவிகித ஆயுதங்களை குவித்துள்ளது, ஆகவே தான் நான்செய் தீவுகளில் தன்னை வலுப்படுத்தி கொள்வதன் மூலம் தைவான் ஜலசந்தியில் நடைபெறும் எந்த பிரச்சினையையும் எதிர்கொள்ள தயாராக திட்டமிட்டு உள்ளது.
முதல்கட்டமாக அமாமி ஒஷிமா தீவில் உள்ள ஜப்பானிய தரைப்படை முகாமில் ஒரு ஆயுத கிடங்கை கட்ட உள்ளது, ஜப்பான் ராணுவத்திற்கு இரண்டு மாதத்திற்கு தேவையான ஆயுதங்கள் உள்ளன ஆனால் அவற்றில் 10 சதவிகிதத்திற்கும் குறைவாக தான் ஒகினாவா மற்றும் கியுஷு தீவில் உள்ளன.
மேலும் ஜப்பான் படைகள் தங்கள் ஆயுதங்களை கடல் மார்க்கமாக நகர்த்தும் திறன்களில் வலுவாக இல்லை ஆகவே கியுஷு, ஒகினாவா மற்றும் இதர சில பகுதிகளில் துறைமுகங்கள் மற்றும் எரிபொருள் கிடங்குளை கட்ட ஜப்பான் அரசு விரும்புகிறது.
ஜப்பான் இப்படி தனது ஆயுதங்கள், எரிபொருள், போக்குவரத்து வசதிகளை அதிகரிக்கும் நேரத்தில் சில வல்லுநர்கள் கியுஷு தீவில் இத்தகைய வசதிகள் இருக்கும் பட்சத்தில் தைவான் போரில் அமெரிக்க படைகள் இங்கிருந்து சிறப்பாக இயங்க முடியும் என நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.