24 சுகோய் – 35 விமானங்களை ரஷ்யாவிடம் இருந்து வாங்கும் ஈரான் !!

ஈரான் இஸ்லாமிய குடியரசு நாட்டின் விமானப்படை தளபதியான ப்ரிகேடியர் ஜெனரல் ஹமீது வஹேதி ரஷ்யாவிடம் இருந்து ஈரான் 24 சுகோய்-35 Sukhoi – 35 ரக போர் விமானங்களை வாங்க உள்ளதாக தெரிவித்துள்ளார்.

இந்த இருபத்தி நான்கு சுகோய்-35 போர் விமானங்களும் முன்னர் எகிப்து ரஷ்யாவிடம் இருந்து வாங்க ஆர்டர் செய்தவையாகும் ஆனால் சில காரணங்களால் இந்த ஒப்பந்தம் நிறைவேறாமல் போனது,

அப்படி எகிப்துக்காக தயாரிக்கப்பட்டு விற்பனை ஆகாமல் இருந்த விமானங்களை ஈரான் வாங்க உள்ளது, மேலும் அடுத்த கட்டமாக 36 சுகோய்-35 Sukhoi-35 ரக விமானங்களை ஈரான் வாங்க ஆர்டர் கொடுக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆகவே ஒட்டுமொத்தமாக தற்போதைய நிலையில் ஈரான் விமானப்படையில் 60 Sukhoi – 35 போர் விமானங்கள் இணையும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் ரஷ்யாவில் ஏற்கனவே 30 ஈரானிய விமானப்படை விமானிகள் இந்த விமானங்களை இயக்க பயிற்சி பெற்று வருவதாக கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.

ஈரான் மீதான தடைகள் காரணமாக புதிய அதிநவீன போர் விமானங்களை படையில் இணைக்க முடியவில்லை அரதப்பழைய Mig-21, Mig-29A, F-5 ஆகிய விமானங்கள் மட்டுமே உள்ளன, இதனாலேயே ஈரான் விமானப்படை சிறந்த படையாக செயல்படுவதில் பல்வேறு சிக்கல்களை சந்தித்து வந்தது.

இந்த நிலையில் 2020ஆம் ஆண்டு ஈரான் மீதான ஐ.நா தடை முடிவுக்கு வந்த நிலையில் ரஷ்யாவுடன் கடந்த ஆண்டு ஜனவரி சுமார் 10 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பில் இரண்டு S-400 அணிகள் மற்றும் இருபத்தி நான்கு Su-35 ரக போர் விமானங்கள் வாங்க ஈரான் ஒப்பந்தம் செய்து கொண்டது.

மேலும் ஏற்கனவே ஈரான் Sukhoi-24 ரக விமானங்களை நிறுத்துவதற்கான வசதிகளை ஏற்படுத்தி உள்ளதாகவும் Mig-29A ரக விமானங்களை Mig-29SMT ரகத்திற்கு தரம் உயர்த்தவும் திட்டமிட்டு உள்ளது கூடுதல் தகவல் ஆகும்.