இந்திய கடற்படையில் இருந்து ஒய்வு பெற்ற போர் கப்பல் !!
1 min read

இந்திய கடற்படையில் இருந்து ஒய்வு பெற்ற போர் கப்பல் !!

சுமார் 32 ஆண்டுகள் இந்திய கடற்படையில் நாட்டுக்கு சேவையாற்றிய பின்னர் கடந்த 19ஆம் தேதி INS AJAY அஜய் எனும் ASW Anti Submarine Warfare Corvette நீர்மூழ்கி கப்பல் எதிர்ப்பு கார்வெட் ஒய்வு பெற்றது.

மும்பை கடற்படை தளத்தில் நடைபெற்ற விழாவில் கடற்படை பாரம்பரிய முறைப்படி சேவையில் இருந்து கப்பல் ஒய்வு பெற்றதை குறிக்கும் வகையில் தேசிய கொடி, கடற்படை கொடி மற்றும் கப்பலின் சின்னம் ஆகியவை கீழ் இறக்கப்பட்டன.

இந்த நிகழ்ச்சியில் தலைமை விருந்தினராக மேற்கு பிராந்திய கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் அஜேந்திர பஹதூர் சிங் மற்றும் சிறப்பு விருந்தினராக மேற்குறிப்பிட்ட கப்பலின் முதலாவது கட்டளை அதிகாரியான ஒய்வு பெற்ற மூத்த கடற்படை அதிகாரி வைஸ் அட்மிரல் ஏ.ஜி. தப்லியால் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மேலும் மூத்த கடற்படை, தரைப்படை, விமானப்படை, கடலோர காவல்படை அதிகாரிகள் , வீரர்கள், INS AJAY கப்பலில் முன்னர் பணியாற்றிய குழுவினர் என ஒட்டுமொத்தமாக 400 பேர் கலந்து கொண்டனர்.

INS AJAY கடந்த 1990ஆம் ஆண்டு ஜனவரி 24ஆம் தேதி அன்றைய சோவியத் ஒன்றியத்தில் இருந்த இன்றைய ஜார்ஜியாவின் போட்டி நகரில் வைத்து நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்திய கடற்படையில் இணைந்தது.

மஹாராஷ்டிரா பகுதி கட்டளை அதிகாரியின் கீழ் இயங்கும் இந்திய கடற்படையின் 23ஆவது ரோந்து கலன் படையணியில் இயங்கி வந்த இந்த கப்பல் கார்கில் போரின் போது பாகிஸ்தான் கடற்கரையை முடக்கிய ஆபரேஷன் தல்வார் மற்றும் பாராளுமன்ற தாக்குதலுக்கு பிறகான ஆபரஷன் பராக்ரம் ஆகியவற்றில் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.