புதிய முப்படை தளபதி எந்த அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டார் ?? 6 முக்கிய காரணிகள் ஒரு சிறப்பு கட்டுரை !!

  • Tamil Defense
  • September 29, 2022
  • Comments Off on புதிய முப்படை தளபதி எந்த அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டார் ?? 6 முக்கிய காரணிகள் ஒரு சிறப்பு கட்டுரை !!

இந்தியாவின் இரண்டாவது முப்படை தலைமை தளபதியாக லெஃப்டினன்ட் ஜெனரல் அனில் சவுஹான் அவர்களை நியமனம் செய்து இந்திய அரசு உத்தரவிட்டுள்ள நிலையில் அவர் தேர்வு செய்யப்பட்டதற்கான 6 முக்கிய காரணிகள் முன்வைக்கப்படுகின்றன.

புல்வாமா தாக்குதலுக்கு பிறகு இந்தியா விமானப்படை மூலமாக பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பாலகோட் பயங்கரவாத முகாம்களை குறிவைத்து தாக்குதல் நடத்திய பிறகு இந்திய பாகிஸ்தான் எல்லையோரம் நிலவிய போர் பதட்ட சூழல் மற்றும் போர் தயார்நிலை மேலாண்மையை லெஃப்டினன்ட் ஜெனரல் அனில் சவுஹான் மேற்கொண்டார்.

இந்திய தரைப்படையின் ஆபரேஷன்களை திட்டமிடும் நடவடிக்கைகள் பிரிவு இயக்குனராக (DGMO) இந்திய மியான்மர் எல்லையோரம் இயங்கி வந்த பல்வேறு பயங்கரவாத குழுக்கள் மீது இந்திய மற்றும் மியான்மர் தரைப்படைகள்
கூட்டாக நடத்திய தாக்குதலான “ஆபரேஷன் சன்ரைஸ்” நடவடிக்கையை திட்டமிட்டார்.

இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் நிலவி வந்த கிளர்ச்சி, பிரிவினைவாத, பயங்கரவாத செயல்பாடுகள் இவர் கிழக்கு பிராந்திய தரைப்படையின் தளபதியாக இருந்த காலகட்டத்தில் மிகப்பெரிய அளவில் குறைந்ததோடு வடகிழக்கு மாநிலங்களில் ராணுவத்தின் எண்ணிக்கை குறையவும் இதன்மூலம் AFSPA எனும் ராணுவ சிறப்பு அதிகார சட்டம் பல இடங்களில் ரத்து செய்யப்படவும் வழிவகுத்தார்.

மேலும் அதே காலகட்டத்தில் இந்திய தரைப்படையின் கிழக்கு கட்டளையகம் அவரது தலைமையின் கீழ் சீன எல்லையோரம் தனது ஆதிக்கத்தை நிலைநாட்டும் நடவடிக்கைகளை மேற்கொண்டது மேலும் எல்லையோர கட்டுமான பணிகள் இந்த நேரத்தில் தான் விரைவுபடுத்தப்பட்டது.

மேலும் அவர் ஒய்வு பெற்ற பிறகு தேசிய பாதுகாப்பு கவுன்சில் செயலகத்தில் ராணுவ ஆலோசகராக தேசிய பாதுகாப்பு ஆலோசகரான அஜித் தோவலுடன் நெருங்கி பணியாற்றி உள்ளார்.

மேலும் இவர் எல்லையோர மேலாண்மை நிபுணர் எனவும், சீன எல்லை நிபணர் எனவும் அறியப்படுகிறார், பாகிஸ்தான் மற்றும் சீனா உடனான எல்லையோரங்களில் முக்கிய பணிகளை கையாண்ட அனுபவம் மிக்கவர் என்பது கூடுதல் சிறப்பாகும்.