இந்தியாவின் புதிய கப்பல் எதிர்ப்பு பலிஸ்டிக் ஏவுகணை டிசைன் தயார் !!
நமது பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையம் தயாரிக்க உள்ள கப்பல் எதிர்ப்பு பலிஸ்டிக் ஏவுகணையின் (ASBM – Anti Ship Ballistic Missile) டிசைன் தயாராகி உள்ளது, தற்போது இதனை உருவாக்குவதற்கான அரசு அனுமதிக்காக DRDO காத்திருக்கிறது.
இந்தியாவுக்கு தரையில் இருந்து ஏவப்படும் ஒரு பலிஸ்டிக் ஏவுகணையின் தேவை உள்ளது, இவற்றை கொண்டு இந்திய பெருங்கடல், அரேபிய கடல் மற்றும் வங்க கடல் பகுதியில் இருந்து வரும் விமானந்தாங்கி கப்பல் படையணிகளை தாக்கி அழிக்கவும் தரைப்பகுதியில் எல்லைக்கு அப்பால் உள்ள இலக்குகளை அழிக்கவும் தேவைப்படுகிறது.
சீனாவிடம் இத்தகைய பல வகையான ஏவுகணைகள் (DF-21D, DF-26, DF-16, DF-17, CM-401, M20B, BP-12B) உள்ளன, மேலும் நாளுக்கு நாள் சீனா இவற்றின் எண்ணிக்கையை அதிகரித்து கொண்டே வருகிறது, ஆகவே சீனாவை எதிர்கொள்ளவும் நமக்கு இத்தகைய வலுவான ஆயுத அமைப்புகள் இன்றியமையாதது என்றால் மிகையாகாது.
சீனா தான் உலகிலேயே முதலாவது நாடாக DF-21D என்ற கப்பல் எதிர்ப்பு பலிஸ்டிக் ஏவுகணையை உருவாக்கியது, இந்த DF-21D 1550 கிலோமீட்டர் பாயும் திறன் கொண்டது, DF-16, DF-17, DF-26 ஆகியவை முறையே 1000, 2500, 5000 கிலோமீட்டர் தாக்குதல் வரம்பை கொண்டவை ஆகும்.
DRDOவின் இந்த புதிய பலிஸ்டிக் ஏவுகணையின் தாக்குதல் தொலைவு சுமார் 1500 கிலோமீட்டர்கள் ஆகும், தற்போது இதன் டிசைன் தயாராக உள்ளதாகவும் மத்திய அரசு இதனை தயாரிக்க அனுமதி அளிக்க பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் காத்திருக்கிறது.
இத்தகைய பலிஸ்டிக் ஏவுகணைகளை தடுப்பது மிகவும் கடினம் மேலும் இவற்றில் வழக்கமான வெடிமருந்தை வைத்தே அனுப்பி பெரிய விமானந்தாங்கி கப்பல்களை தாக்கி அழிக்க முடியும் தேவைப்படும் பட்சத்தில் சிறிய ரக அணு ஆயுதங்களை கூட இவற்றில் வைத்து ஏவி பலத்த சேதம் ஏற்படுத்தும் தாக்குதல்களை நடத்த முடியும் என கூறப்படுகிறது.
இந்த புதிய பெயரிடப்படாத பலிஸ்டிக் ஏவுகணையானது இந்தியா ஏற்கனவே K4, K2, K15 போன்ற நீர்மூழ்கியால் ஏவப்படும் பலிஸ்டிக் ஏவுகணைகளுடன் சேர்த்து உலக கடற்படைகளை மிரட்டும் திறனை கொடுக்கும் என்பதில் சந்தேகமில்லை.