குஜராத் மாநிலத்தை சேர்ந்த குல்தீப் யாதவ் (59) கடந்த 28 ஆண்டுகளாக பாகிஸ்தானில் உளவு பார்த்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டு அந்நாட்டு சிறையில் வாடி வந்த நிலையில் தற்போது விடுதலை செய்யப்பட்டு ஆகஸ்ட் மாதம் 25ஆம் தேதி நாடு திரும்பி உள்ளார்.
அப்போது அவர் தனது வாழ்வாதாரத்திற்கு அரசு உதவ வேண்டும் எனவும் தனது சட்டை கூட பாகிஸ்தானில் கிடைத்தது தன்னிடம் சொந்தமாக துணிகள் கூட இல்லை கடைசி வரை எனது உடன் பிறந்தவர்களையே நம்பி வாழ முடியாது ஆகவே அரசு தயவு செய்து ஏதேனும் வாழ்வாதார உதவி செய்ய வேண்டும் என கேட்டு கொண்டார்.
பின்னர் அவர் பேசும் போது பாகிஸ்தானிய சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள இந்தியர்களுக்கும் அரசு உதவ வேண்டும் அவர்கள் அனைவரும் அங்கு கொடும் சித்திரவதை அனுபவித்து வருவதாகவும் பலர் தொடர் சித்தரவதைகள் காரணமாக மன நலம் பாதிக்கப்பட்டு சொந்த பெயரை கூட சொல்ல முடியாமல் மறந்து விட்டதாகவும் கூறினார்.
பலர் தண்டனை காலம் முடிந்த பிறகும் சிறைவாசம் அனுபவித்து வருவதாகவும் அவர்களை விடுதலை செய்யுமாறு பாகிஸ்தான் அதிகாரிகளிடம் கூறிய போது இந்திய அரசு உங்களை ஏற்று கொள்ளவில்லை அதனால் உங்களை விடுதலை செய்ய முடியாது என தங்களிடம் பாகிஸ்தான் சிறைத்துறை அதிகாரிகள் கூறியதாகவும்
தான் சிறையில் இருந்த போது இந்தியாவை சேர்ந்த பப்லு ராம் என்பவரை சந்தித்ததாகவும் அவரிடம் ஆதார் அட்டை இருந்ததாகவும் இன்னும் சிலரிடம் இந்திய பாஸ்போர்ட் கூட இருந்ததாகவும் அவர் தெரிவித்தார் இத்தகையோர் ஏதோ காரணங்களால் கைது செய்யப்பட்டு பாகிஸ்தான் சிறைகளில் அடைக்கப்பட்டு உள்ளதாக தெரிவித்த அவர்,
நாட்டுக்காக பாகிஸ்தானுக்கு உளவு பார்க்க சென்றோரையும் இதர இந்திய குடிமக்களையும் காப்பாற்ற வேண்டியது இந்திய அரசின் கடமையாகும் ஆகவே அவர்களை மீட்க தகுந்த நடவடிக்கைகளை இந்திய அரசு எடுக்க வேண்டும் எனவும் கூறினார்.
குல்தீப் யாதவ் கடந்த 1989ஆம் ஆண்டு தில்லியில் வேலை கிடைத்து இருப்பதாக தனது குடும்பத்தாரிடம் கூறி விட்டு சென்றார் ஆனால் என்ன பணி என சொல்லவில்லை மாறாக அப்படியே பாகிஸ்தான் சென்றார் 1994ஆம் ஆண்டு பாகிஸ்தான் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு மூன்றாண்டுகள் சிறையில் இருந்தார்.
பின்னர் ஒரு பாகிஸ்தான் ராணுவ நீதிமன்றம் இவரது வழக்கை விசாரித்து சுமார் 25 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது ஆக மொத்தத்தில் சுமார் 33 ஆண்டுகளை இந்திய நாட்டிற்காக பாகிஸ்தானிலேயே கழித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.