
இந்தியாவின் இஸ்ரோ ISRO – Indian Space Research Organisation அதாவது இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமானது விண்வெளி சுற்றுபயணம் சார்ந்த புதிய திட்டத்தை செயல்படுத்த முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதன்படி இதற்கென ஒரு பிரத்தியேக ராக்கெட்டை உருவாக்கவும் மேலும் மனிதர்களை சுமக்க கூடிய ஒரு கலனை உருவாக்கி மேற்குறிப்பிட்ட ராக்கெட்டில் இணைத்து விண்வெளிக்கு அனுப்புவது தான் அடிப்படை திட்டமாகும், இதை பொதுத்துறை தனியார்துறை கூட்டு பங்களிப்புடன் நிறைவேற்ற திட்டமிடப்பட்டு உள்ளது.
இஸ்ரோ 2028ஆம் ஆண்டு வாக்கில் விண்வெளி சுற்றுபயணமானது புதிய உயரங்களை தொடும் எனவும் பல உலகளாவிய நிறுவனங்களை விடவும் குறைந்த விலையில் இந்த பயண சேவையை இஸ்ரோ அளிக்கும் எனவும் கூறப்படுகிறது.
அதாவது இன்றுள்ள பல நிறுவனங்கள் தலா 33 கோடி ரூபாய் வரை கட்டணமாக வசூலிக்கும் நிலையில் இஸ்ரோ ஒரு நபருக்கு 80 லட்சம் ரூபாய் மட்டுமே வசூலிக்க திட்டமிட்டுள்ளது, இதன் மூலம் சர்வதேச விண்வெளி சுற்றுலா பயணிகளும் இந்தியா வருவர் என்றால் மிகையல்ல.
இந்தியா இதற்காக மீண்டும் பயன்படுத்தும் ராக்கெட்டுகளை உருவாக்கி வருகிறது, இதுபற்றி இஸ்ரோ தலைவர் முனைவர் சோம்நாத் கூறுகையில் மிக குறைந்த மதிப்பு கொண்ட மீண்டும் மீண்டும் பயன்படுத்தும் ராக்கெட்டுகளை உருவாக்கி வருகிறோம் என்றார்.
இந்த மீண்டும் மீண்டும் பயன்படுத்தும் ராக்கெட்டுகளை Re-Usable Rockets தயாரிக்கும் திட்டம் எந்தவித தடங்கல் இன்றி சரியாக சென்றால் 2030ஆம் ஆண்டுக்கு முன்னர் அதற்கான சோதனைகள் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.