விரைவில் படையில் இணையும் 5ஆவது ஸ்கார்பீன் நீர்மூழ்கி கப்பல் !!

  • Tamil Defense
  • September 15, 2022
  • Comments Off on விரைவில் படையில் இணையும் 5ஆவது ஸ்கார்பீன் நீர்மூழ்கி கப்பல் !!

சமீபத்தில் CNBC ஊடகம் வெளியிட்டுள்ள செய்தியின்படி மும்பை மஸகான் கப்பல் கட்டுமான தளம் MDL Mazagon Docks Limited ஐந்தாவது ஸ்கார்பீன் டீசல் எலெக்ட்ரிக் தாக்குதல் நீர்மூழ்கி கப்பலை டெலிவரி செய்ய உள்ளது.

இந்த ஆண்டு இறுதியில் INS VAGIR வாகிர் என பெயரிடப்பட்டுள்ள ஐந்தாவது ஸ்கார்பீன் ரக நீர்மூழ்கி கப்பலை இந்திய கடற்படை பெற்று கொள்ள உள்ளது, அடுத்த ஆண்டு துவக்கத்தில் ஆறாவதும் கடைசியுமான INS VAGSHEER வாக்ஷீர் இந்திய கடற்படையிடம் ஒப்படைக்கப்படும்.

ஃபிரான்ஸ், சிலி, பிரேசில், மலேசியா போன்ற நாடுகளில் இந்த வகை நீர்மூழ்கி கப்பல்களை ஸ்கார்பீன் என்றே அழைக்கும் நிலையில் இந்தியாவில் இவற்றை கல்வரி எனவும் பெயர்சூட்டி அழைப்பது குறிப்பிடத்தக்கது ஆகும்.

இந்த வகை நீர்மூழ்கி கப்பல்களால் நீர்மூழ்கி எதிர்ப்பு, கப்பல் எதிர்ப்பு, உளவு, கண்காணிப்பு, கண்ணிவெடி போர்முறை ஆகிய பணிகளை சிறப்பாக திறம்பட கையாள முடியும் என்பது இவற்றின் சிறப்பம்சம் ஆகும்.

1615 – 1775 டன்கள் எடை கொண்ட இவை, 12,000 கிலோமீட்டர் தலைவு பயணிக்கும், ஒரு மணி நேரத்திற்கு 8-20 கிலோமீட்டர் வேகத்தில் செல்பவை, நான்கு ஜெர்மானிய MTU 12V 396 SE84 டீசல் என்ஜின்களால் இயங்குபவை.

இந்த வகை நீர்மூழ்கி கப்பல்கள் ஆறு 533 மில்லிமீட்டர் அளவு கொண்ட நீரடிகணைகள் ஏவும் குழாய் கொண்டவை அவற்றில் இருந்து ஏவ 18 கனரக நீரடிகணைகள் (Torpedo) கொண்டவை, SM39 EXOCET கப்பல் எதிர்ப்பு ஏவுகணைகள் அல்லது 30 கண்ணிவெடிகளை சுமக்க முடியும்.

மேலும் கூடுதலாக இவற்றில் C303 நீரடிகணைகள் எதிர்ப்பு அமைப்பு, SUBTICS – Submarine Tactical Integrated Combat System அதாவது ஒருங்கிணைந்த நீர்மூழ்கி போர் கட்டுபாட்டு அமைப்பு, LOFAR Low Frequency Analysis and Ranging அதாவது குறைந்த அலைவரிசையிலும் ஆய்ந்து இலக்கை கண்டுபிடிக்கும் சோனார் மற்றும் பல்வேறு சென்சார்கள் உள்ளன.