இந்திய கடற்படைக்கு 4 விமானந்தாங்கி, 6 சிறிய கேரியர் கப்பல்கள், 320 வானூர்திகள் தேவை !!

இந்திய கடற்படையில் சமீபத்தில் முழுக்க முழுக்க உள்நாட்டிலேயே வடிவமைத்து தயாரிக்கப்பட்ட INS VIKRANT விக்ராந்த் விமானந்தாங்கி போர் கப்பல் படையில் இணைந்தது இதையடுத்து இந்திய கடற்படைக்கு மூன்றாவது விமானந்தாங்கி கப்பல் தேவை எனும் பேச்சு பரவலாக எழுந்துள்ளது.

சீனா ஐந்தாவது விமானந்தாங்கி கப்பலை கட்டி வரும் நேரத்தில் இந்தியாவுக்கு அதிகமான விமானந்தாங்கி கப்பல்கள் தேவை என்கிற வாதத்துடன் இந்தியாவுக்கு நான்கு விமானந்தாங்கி கப்பல்கள் வேண்டும் என பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

அதாவது விக்ராந்த் ரகத்தில் இரண்டு விமானந்தாங்கி கப்பல்கள் மற்றும் விக்ரமாதித்யா ரகத்தில் இரண்டு விமானந்தாங்கி கப்பல்கள், 1 கிழக்கு, 1 மேற்கு, 1 தெற்கு பகுதியில் இயங்க வேண்டும் 1 ரிசர்வ் அல்லது சீரமைப்பில் இருக்கும், இப்படி இந்தியாவை சுற்றியுள்ள கடல் பரப்பை பாதுகாக்க முடியும் குறிப்பாக பெரும் வளம் கொண்ட இந்திய பெருங்கடலின் தெற்கு பகுதியை நிரந்தரமாக கண்காணிக்க முடியும்.

இது போக இந்திய கடற்படைக்கு 6 LHD என அறியப்படும் ஹெலி கேரியர் கப்பல்களும் தேவைப்படுகிறது, பல முறை இத்திட்டம் நிதி ஒதுக்கீடு இல்லாமல் ரத்தாகிய நிலையில் இந்திய கடற்படை மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் விதமாக இதற்காக தொடர்ந்து முயற்சி செய்து கொண்டே இருக்கிறது,

ஒவ்வொரு கப்பவிலும் நூற்றுக்கணக்கான வீரர்கள் அல்லது 40க்கும் அதிகமான டாங்கிகள், கனரக, நடுத்தர ஹெலிகாப்டர்கள் மற்றும் போர் விமானங்களையும் இவற்றால் சுமக்க முடியும் இதன் மூலம் இந்திய பெருங்கடல் பகுதியில் இந்தியா அசைக்க முடியாத வலிமையை பெறும் என்றால் மிகையாகாது.

மேலும் அந்தமான் மற்றும் லட்சத்தீவுகளில் நிரந்தர விமான தளம் அமைத்து அங்கிருந்து இந்திய கடற்படையின் ரோந்து விமானங்கள் மற்றும் போர் விமானங்களை அனுப்பி கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த கப்பல்கள் மற்றும் தளங்களில் பயன்படுத்த இந்திய கடற்படைக்கு 300 க்கும் அதிகமான ஹெலிகாப்டர்கள் மற்றும் போர் விமானங்கள் தேவை, அவற்றில் 150 TEBBF போர் விமானங்கள், 26 ரஃபேல் அல்லது FA-18 போர் விமானங்கள், 72 F-35 போர் விமானங்கள், 72 ஹெலிகாப்டர்கள் ஆகியவை தேவைப்படும்.

மேற்குறிப்பிட்ட ஆறு ஹெலிகாப்டர் கேரியர் கப்பல்களிலும் பயன்படுத்தி கொள்ள ஹெலிகாப்டர்கள் மற்றும் F-35 போர் விமானங்கள் தேவைப்படும், குறிப்பாக இந்த கப்பல்களில் உள்ள நீளம் குறைந்த ஒடுபாதையில் இயங்க செங்குத்தாக மேல் எழும்பி தரை இறங்கும் திறன் கொண்ட F-35 ரக போர் விமானங்கள் தான் தகுதியானவை ஆகும்.

இப்படி 4 விமானந்தாங்கி கப்பல்கள், 6 ஹெலிகாப்டர் கேரியர் கப்பல்கள் மற்றும் 300க்கும் அதிகமான போர் விமானங்களை இந்திய கடற்படை கொண்டிருந்தால் இந்தியாவின் ராணுவ வலிமையை இந்திய பெருங்கடல் முழுவதும் கொண்டு சேர்த்து சீனாவுக்கு மிகப்பெரிய சவால் விடுக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.