க்ரூஸ் ஏவுகணைகளுக்கான என்ஜின்களை தயாரிக்கும் இந்திய நிறுவனம் !!

  • Tamil Defense
  • September 23, 2022
  • Comments Off on க்ரூஸ் ஏவுகணைகளுக்கான என்ஜின்களை தயாரிக்கும் இந்திய நிறுவனம் !!

தெலுங்கானா மாநில தலைநகர் ஹைதராபாத் நகரை மையமாக கொண்டு இயங்கும் Paninian Private Limited எனும் நிறுவனம் க்ரூஸ் ஏவுகணைகளுக்கான ஏரோ இன்ஜினை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறது.

தற்போது 4.5 கிலோநியூட்டன் ஆற்றலை வெளிப்படுத்தும் என்ஜினுடைய கான்செப்ட் இறுதி செய்யப்பட்டு உள்ளதாகவும் இந்த திட்டத்தில் முன்னாள் DRDO மூத்த விஞ்ஞானி ஒருவரும் பல ஜெட் என்ஜின் நிபுணர்களும் பணியாற்றி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த என்ஜினை க்ரூஸ் ஏவுகணைகள் மற்றும் மிகப்பெரிய ஆளில்லா ஆயுதம் தாங்கிய விமானங்கள் (WSI UAV) மற்றும் ஆளில்லா போர் விமானங்கள் (UCAV) ஆகியவற்றிலும் பயன்படுத்தி கொள்ள முடியும் மேலும் எதிர்காலத்தில் இத்தகைய என்ஜின்களுக்கு வெளிநாடுகளை நாட வேண்டிய நிலை வராது.

இந்திய விமானப்படை மற்றும் CEMILAC ராணுவ வானூர்திகள் தர நிர்ணய அமைப்பு ஆகியவை இந்த திட்டத்தில் ஆர்வம் காட்டி வருவதாகவும் தேசிய ஏரோஸ்பேஸ் ஆய்வகத்தில் என்ஜினுடைய ஒவ்வொரு பாகங்களும் சுமார் 2000 மணி நேரம் சோதனை செய்யப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது.

பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தில் பணியாற்றி ஒய்வு பெற்ற மூத்த விஞ்ஞானி கந்தாயதா கவுடா மற்றும் General Electrics, Rolls Royce நிறுவனங்களின் ஜெட் என்ஜின் தயாரிப்பு பிரிவுகளில் பணியாற்றிய நிபுணர்கள் இந்த திட்டத்தை மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.