இந்திய தரைப்படை எதிர்கால போர்களை சுதேசி தொழில்நுட்பங்களை கொண்டு சந்திக்கும் கொள்கையின் அடிப்படையில் அவசர கால கொள்முதலை இந்தியாவிலேயே மேற்கொள்ள திட்டமிட்டு உள்ளதாக கூறப்படுகிறது.
அதன்படி பிரங்கிகள், ஏவுகணைகள், ஆளில்லா விமானங்கள், ட்ரோன் எதிர்ப்பு அமைப்புகள், தகவல் தொழில்நுட்ப அமைப்புகள், ராணுவ வாகனங்கள், பொறியியல் தளவாடங்கள் ஆகியவற்றை தயாரிக்கும் நிறுவனங்களுக்கு இந்திய தரைப்படை அழைப்பு விடுத்துள்ளது.
இதற்கான கால அளவு மிகவும் குறுகியதாகும், ஆறு மாதங்களுக்குள் நிறுவனங்கள் தரைப்படையை அணுக வேண்டும் பின்னர் ஒப்பந்தம் கையெழுத்தாகும் பட்சத்தில் அதிலிருந்து ஒரு வருட காலத்திற்குள் தளவாடங்களை டெலிவரி செய்ய வேண்டியது நிபந்தனை ஆகும்.
இந்திய அரசு ஆத்மநிர்பார் பாரத் திட்டத்தின் கீழ் இந்திய நிறுவனங்கள் மற்றும் தொழில்துறைக்கு புதிய உத்வேகம் அளிக்க திட்டமிட்டுள்ளது மேலும் அது சார்ந்த வாய்ப்புகளை பயன்படுத்தி கொள்ள இந்திய நிறுவனங்களை அரசு ஊக்கப்படுத்தி வருகிறது.
அதே போல் இந்திய விமானப்படை பாதுகாப்பு அமைச்சகத்தை மேலதிக Boeing CH-47D Chinook சினூக் கனரகஹெலிகாப்டர்கள் வாங்க அணுகிய போது உள்நாட்டு தயாரிப்பு ஹெலிகாப்டர்களை வாங்கவும் இஸ்ரேலிய ஹெரோன் Heron ட்ரோன்களை உள்நாட்டிலேயே மேம்படுத்தவும் அரசு அறிவுறுத்தி உள்ளது கூடுதல் தகவல் ஆகும்.