தனது க்ரூஸ் ஏவுகணை திறன்களை அதிகபடுத்த தனியார் துறையை ஈடுபடுத்த இந்தியா திட்டம் !!

  • Tamil Defense
  • September 17, 2022
  • Comments Off on தனது க்ரூஸ் ஏவுகணை திறன்களை அதிகபடுத்த தனியார் துறையை ஈடுபடுத்த இந்தியா திட்டம் !!

தற்போது உக்ரைனில் நடைபெற்று வரும் போரில் ரஷ்யா அதிகளவில் க்ரூஸ் ஏவுகணைகளை பயன்படுத்திய நிலையில் தற்போது கிட்டத்தட்ட க்ரூஸ் ஏவுகணை கையிருப்பு முடியும் நிலையில் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது இந்திய ராணுவ தலைமையகத்தின் கண்களை திறக்க செய்துள்ளது, இதுவரை இந்தியாவில் பொதுத்துறை நிறுவனங்கள் மட்டுமே இந்த க்ரூஸ் ஏவுகணை தயாரிப்பில் ஈடுபட்டு வந்தன, அதுவும் சொல்லி கொள்ளும்படியாக இல்லை.

ஆகவே தற்போது இந்திய பாதுகாப்பு அமைச்சகம் நாட்டின் தனியார் துறை நிறுவனங்களையும் க்ரூஸ் ஏவுகணை தயாரிப்பில் ஈடுபடுத்த முடிவு செய்துள்ளது, அதன்படி க்ரூஸ் ஏவுகணைகளுக்கான Turbojet என்ஜின் தயாரிக்கும் நிறுவனங்களுக்கு நிதியும், சப்சானிக் ஏவுகணைகளை தயாரிக்க உள்ள நிறுவனங்களின் திட்டங்கள் பரிசீலனை செய்யப்பட்டு வருகின்றன.

இந்தியாவின் முப்படைகளை பொருத்தவரை விலை மதிப்பு கூடுதலான பிரம்மாஸ் ஏவுகணைகளை தான் அதிகம் பயன்படுத்தும் நிலை உள்ளது, அதற்கு காரணம் விலை மதிப்பு குறைந்த சப்சானிக் திறன் கொண்ட ஏவுகணைகளை அதிகளவில் தயாரிப்பதில் கோட்டை விட்டதே ஆகும்.

தற்போது இந்திய தனியார் நிறுவனங்களை தரையிலிருந்தும் வானிலிருத்தும் ஏவக்கூடிய 200 கிலோமீட்டர் முதல் 500 கிலோமீட்டர் தொலைவு வரை சென்று தாக்கக்கூடிய சப்சானிக் க்ரூஸ் ஏவுகணைகளை தயாரிக்கும் பணியில் ஈடுபடுத்த பாதுகாப்பு அமைச்சகமும் இந்திய ராணுவமும் திட்டமிட்டுள்ளன.

அதேபோல் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் 1500 கிலோமீட்டர் சென்று தாக்கும் தொலைதூர க்ரூஸ் ஏவுகணை ஒன்றை உருவாக்கி வருகிறது, அடுத்த 20 ஆண்டுகளில் சுமார் 3000 சப்சானிக், சூப்பர்சானிக் ஏவுகணைகள் இந்தியாவுக்கு தேவைப்படும்,

மேலும் அதிபயங்கர திறன் கொண்ட ஹைப்பர்சானிக் ஏவுகணைகளும் இன்றியமையாதவை அவற்றை தயாரிப்பதில் முழு கவனம் தேவை ஆகவே சப்சானிக் ஏவுகணை தயாரிப்பை அதிகளவில் மேற்கொள்ள தனியார் பங்களிப்பு நாடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.