சீன எல்லையோரம் இஸ்ரேலிய ட்ரோனை களமிறக்கிய இந்தியா !!

இந்தியா, சீனா உடனான எல்லை கட்டுபாட்டு கோடு அமைந்துள்ள பகுதியில் இஸ்ரேலிய தயாரிப்பு IAI Heron Mk2 ஹெரோன் மார்க்-2 ரக ஆளில்லா விமானத்தை களமிறக்கி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

அதாவது இந்தியா இஸ்ரேலிய ஏரோஸ்பேஸ் தொழிற்சாலையிடம் கடந்த ஆண்டு மேற்குறிப்பிட்ட ஆளில்லா விமானங்களை மூன்று ஆண்டுகளுக்கு குத்தகை அடிப்படையில் பெற்று கொண்டது.

அந்த வகையில் தற்போது இரண்டு ஹெரோன் மார்க்-2 ஆளில்லா விமானங்கள் அருணாச்சல பிரதேச மாநிலத்தில் களமிறக்கப்பட்டுள்ள நிலையில் இந்த மாத இறுதிக்கு முன்னர் மேலும் இரண்டு ஆளில்லா விமானங்கள் லடாக்கில் களமிறக்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த ஹெரோன் ரக ஆளில்லா விமானங்கள் MALE ரகத்தை சேரந்தவை ஆகும், நடுத்தர உயரத்தில் நீண்ட நேரம் பறக்கும் ஆற்றல் கொண்ட இவை சுமார் 10,000 மீட்டர் உயரத்தில் 45 மணி நேரம் தொடர்ந்து அதிகபட்சமாக 140 நாட்ஸ் வேகத்தில் பறக்கும் ஆற்றல் கொண்டது.

இந்தியா ஏற்கனவே சுமார் 60 ஹெரோன் மார்க்-1 ரக ஆளில்லா விமானங்களை இயக்கி வருவதும் தற்போது படையில் இணைந்துள்ள இந்த மேம்படுத்தப்பட்ட அதிநவீன ஹெரோன் மார்க்-2 ரக ஆளில்லா விமானங்கள் இந்திய படைகளுக்கு மேலும் வலு சேர்க்கும் என்றால் மிகையாகாது.