நடுவானில் என்ஜின் சோதனை மேற்கொள்ள சோதனை விமானம் வாங்கும் இந்தியா ??

கடந்த வாரம் நமது DRDO பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் மற்றும் பல தனியார் வானூர்தி தயாரிப்பு நிறுவனங்கள் கூட்டாக இந்தியாவிலேயே விமான என்ஜின்களை வடிவமைத்து தயாரிப்பது குறித்து ஆலோசனை நடத்தின.

இந்த ஆலோசனையில் குறிப்பாக ஆளில்லா போர் விமானங்கள் UCAV மற்றும் விமானிகள் இருக்கும் போர் விமானங்களுக்கான என்ஜின் தயாரிப்பு குறித்து பேசப்பட்டது இறுதியில் ஒருமனதாக என்ஜின்களை நடுவானில் சோதனை செய்ய சோதனை விமானம் தேவை எனும் கருத்து முன்வைக்கப்பட்டது.

அதாவது ஒரு பெரிய ராணுவ போக்குவரத்து விமானத்தை இந்த சோதனை பணிகளுக்காக மாற்றம் செய்வர் என்ஜின் திறனை பரிசோதனையின் போது கண்காணிக்கும் அமைப்புகள் இருக்கும் மேலும் சோதனை செய்யப்பட உள்ள என்ஜினை இறக்கையில் பொருத்தி விமானம் பறக்கும் போது சோதனை செய்ய முடியும்.

தற்போது ரஷ்யாவை தான் இத்தகைய சோதனைகளை செய்ய நம்பி இருக்கும் நிலையில் நாம் உள்ளோம் ஆகவே முழுமையாக தீவிரமான விமான என்ஜின் தயாரிப்பு பணியில் ஈடுபடும் போது நமக்கு இத்தகைய ஒரு சோதனை விமானம் இன்றியமையாதது ஆகும்.

இந்தியா போர் விமானங்களுக்கு சுமார் 1000 சுதேசி என்ஜின்களை பெற விரும்புகிறது குறிப்பாக ஐந்தாம் தலைமுறை ஆம்கா போர் விமானத்திற்கு சுமார் 110 கிலோ நியூட்டன் திறனை வெளிப்படுத்தும் என்ஜினை உருவாக்க திட்டமிடப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்த கூட்டு சந்திப்பின் போது க்ரூஸ் ஏவுகணைகள் மற்றும் UCAV எனப்படும் ஆளில்லா போர் விமானங்களுக்கான என்ஜின்களை தயாரிக்க தனியார் நிறுவனங்கள் தொழில்நுட்ப பரிமாற்ற அடிப்படையில் அனுமதி வழங்கப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது கூடுதல் தகவல் ஆகும்.