இந்திய விமானப்படை தன்னிடம் பயன்பாட்டில் உள்ள சோவியத் ஒன்றிய காலகட்ட Ilyushin IL – 76 ரக ராணுவ போக்குவரத்து விமானங்களின் ஒய்வு திட்டம் குறித்த சிந்தனைகளை துவங்கி உள்ளது.
இதற்கு முக்கிய காரணம் ரஷ்ய உக்ரைன் போர் காரணமாக பல உலக நாடுகள் எடுத்துள்ள தடை நடவடிக்கைகள் காரணமாக இந்த IL-76 ராணுவ போக்குவரத்து விமானங்களின் மேம்பாட்டு மற்றும் சீரமைப்பு பணிகள் கைவிடப்பட்டதாகும்.
இந்திய விமானப்படை தற்போது 17 இல்யூஷின் Ilyushin IL-76 MD ரக ராணுவ போக்குவரத்து விமானங்களை பயன்படுத்தி வருகிறது, இவற்றை கடந்த 1985-1989 ஆகிய ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் இந்தியா வாங்கியது.
வருகிற 2030ஆம் ஆண்டு வாக்கில் இவற்றில் மூன்று விமானங்கள் 45 வருட சேவையை தொட்டு விடும் இவற்றில் உள்ள Soloviev D-30-1KP-1 Turbofan என்ஜின்களும் 45 ஆண்டுகளை தொட்டு விடும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்திய விமானப்படையின் ஆறு IL-78 MKI ரக எரிபொருள் டேங்கர் விமானங்கள் மற்றும் மூன்று A-50EI Phalcon AWACS கண்காணிப்பு ரேடார் விமானங்களில் உள்ள புதிய Aviadvigatel PS-90A Turbofan என்ஜின்களை பதினேழு IL-76 MD ரக விமானங்களிலும் பொருத்த முன்னர் திட்டமிடப்பட்டு இருந்தது.
IL-76 MD ரக விமானங்களின் பராமரிப்பில் பல சிக்கல்கள் உள்ளன, பழைய விமானங்கள் ஆகையால் உதிரி பாகங்களை பெறுவது கடினமாகி உள்ளது மேலும் ஏவியானிக்ஸ் மற்றும் வழிகாட்டி அமைப்புகள் கூட அரதபழைய அமைப்புகள் ஆகும்.
தற்போது ரஷ்யர்களே சக்திவாய்ந்த, சிக்கனம் மிகுந்த PS-90A-76 என்ஜின்களை கொண்ட புதிய Ilyushin IL-76MD-90A ரக போக்குவரத்து விமானங்களை பயன்படுத்த துவங்கி உள்ள நிலையில் நாமும் பழைய விமானங்களுக்கு ஒய்வு கொடுப்பதே நல்லது.