இந்திய போர் கப்பல்களுக்கு 1700 கோடி ரூபாய் மதிப்பில் தொலைவு நீட்டிக்கப்பட்ட பிரம்மாஸ் ஏவுகணைகள் வாங்க ஒப்பந்தம் !!

இந்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் கொள்முதல் பிரிவானது தரை தாக்குதல் மற்றும் கப்பல் எதிர்ப்பு என இரட்டை பயன்பாடு கொண்ட தாக்குதல் தொலைவு நீட்டிக்கப்பட்ட பிரம்மாஸ் ஏவுகணைகளை இந்திய கடற்படைக்காக வாங்க பிரம்மாஸ் ஏரோஸ்பேஸ் லிமிட்டட் Brahmos Aerospace Limited நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது.

இந்திய கடற்படையின் புத்தம் புதிய போர் கப்பலான INS Visakhapatnam விசாகப்பட்டினம் கடந்த ஜனவரி மாதம் இந்த தாக்குதல் தொலைவு நீட்டிக்கப்பட்ட பிரம்மாஸ் ஏவுகணையை ஏவி வெற்றிகரமாக சோதனை செய்தது.

தற்போது இந்திய கடற்படையின் பத்து முன்னனி போர் கப்பல்களில் இந்த தாக்குதல் தொலைவு நீட்டிக்கப்பட்ட பிரம்மாஸ் ஏவுகணைகள் பொருத்தப்பட்டுள்ளன, மேலும் ஐந்து கப்பல்களில் இவற்றிற்கான ஏவும் அமைப்புகள் பொருத்தப்பட்டுள்ளன.

இந்த தொலைவு நீட்டிக்கப்பட்ட ஏவுகணைகளை படையில் இணைப்பதன் மூலமாக இந்திய கடற்படையின் திறன்கள் பன்மடங்கு அதிகரிக்கும் மேலும் இந்த ஒப்பந்தம் மூலமாக இந்தியாவின் உள்நாட்டு தயாரிப்பு திறன்களுக்கு புதிய உத்வேகம் அளிக்கும் எனவும் மூத்த பாதுகாப்பு துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

பிரம்மாஸ் ஏவுகணைகளை ஏற்கனவே இந்திய தரைப்படை லடாக் மற்றும் அருணாச்சல பிரதேசத்தில் நிலைநிறுத்தியுள்ளது, விமானப்படை தரையிலிருந்து ஏவக்கூடிய இரண்டு படையணி பிரம்மாஸ் ஏவுகணைகளையும் போர் விமானத்தில் இருந்து ஏவக்கூடிய பிரம்மாஸ் ஏவுகணைகளையும் படையில் இணைத்துள்ளது.

மேலும் ஃபிலிப்பைன்ஸ் நாட்டிற்கு சுமார் 2770 கோடி ரூபாய் (375 million USD) மதிப்பிலான பிரம்மாஸ் ஏவுகணை அமைப்புகளை ஏற்றுமதி செய்ய ஒப்பந்தம் செய்துள்ள நிலையில் இந்தோனேசியா, வியட்நாம், ஐக்கிய அரபு அமீரகம், சவுதி அரேபியா, தென் ஆஃப்பிரிக்கா ஆகிய நாடுகள் இவற்றை வாங்க ஆர்வம் காட்டியுள்ளது கூடுதல் சிறப்பாகும்.