புதிய தாக்குதல் ஹெலிகாப்டரை உருவாக்கும் இந்தியா !!

இந்தியாவின் HAL Hindustan Aeronautics Limited ஹிந்துஸ்தான் ஏரோநாடிக்ஸ் லிமிடெட் நிறுவனம் புதிய தாக்குதல் ஹெலிகாப்டர் ஒன்றை உருவாக்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதாவது ஏற்கனவே இந்த நிறுவனம் தயாரித்த LUH இலகுரக பயன்பாட்டு ஹெலிகாப்டரில் ஆயுதங்களை பொருத்தப்பட்ட வடிவத்தை தயாரிக்க LUH – WSI Light Utility Helicopter Weapon Systems Integrated எனும் ஆயுதம் தாங்கிய ஹெலிகாப்டரை தயாரிக்க முடிவு செய்துள்ளது.

அதற்காக இந்த LUH ஹெலிகாப்டரில் FLIR – Forward Looking Infrared எனப்படும் கேமரா, சுழலும் இயந்திர துப்பாக்கி, ராக்கெட்டுகள், வான் தாக்குதல் ஏவுகணைகள், தரை தாக்குதல் குறிப்பாக டாங்கி எதிர்ப்பு ஏவுகணைகளை சுமக்கும் வகையில் இந்த ஹெலிகாப்டர் மேம்படுத்தப்படும் என கூறப்படுகிறது.

இந்த ஹெலிகாப்டர்கள் வீரர்களையும் சுமக்கும் அதே நேரத்தில் கண்காணிப்பு மற்றும் பல்வேறு வகையான தாக்குதல் பணிகளையும் மேற்கொள்ள உதவும் வகையிலான பல அதிநவீன சென்சார்கள் ஆகியவற்றை தன்னகத்தே கொண்டிருக்கும் என பரவலாக எதிர்பார்க்கப்படுகிறது.

அமெரிக்காவின் Boeing MH – 6 Little bird ரக சிறிய போக்குவரத்து மற்றும் தாக்குதல் ஹெலிகாப்டர்களுக்கு இணையானது தான் இந்த LUH WSI ஹெலிகாப்டர்கள் என்றால் மிகையாகாது.

கர்நாடக மாநிலம் தும்கூரில் உள்ள தொழிற்சாலையில் முதல்கட்டமாக 6 LSP வரிசை ஹெலிகாப்டர்கள் தயாரிக்கப்படும், பின்னர் இந்திய விமானப்படை மற்றும் தரைப்படைக்கு தலா 6 வீதம் 12 ஹெலிகாப்டர்களும், 2023-2024 வாக்கில் தரைப்படை மற்றும் விமானப்படைக்கு 180 ஹெலிகாப்டர்களுக்கான ஒப்பந்தமும் கையெழுத்தாகும் இவற்றில் எத்தனை ஆயுதம் தாங்கிய ஹெலிகாப்டர்களாக இருக்கும் என்பது பற்றிய தகவல்கள் தற்போது இல்லை.