HLFT-42 Hindustan Lead-in Fighter Trainer – 42 என்பது இந்தியா சொந்தமாக தயாரிக்க திட்டமிட்டுள்ள பிரதான பயிற்சி போர் விமானம் ஆகும் இது ஏற்கனவே உள்ள தேஜாஸ் இலகுரக போர் விமானத்தை அடிப்படையாக கொண்டது.
இரட்டை இருக்கை கொண்ட இந்த விமானத்தை அடிப்படை மற்றும் உச்சகட்ட போர் விமான பறத்தல் பயிற்சிகளை அளிக்க பிரதானமாக பயன்படுத்தி கொள்ள முடியும் அதே நேரத்தில் தேவைப்படும் போது இலகுரக தாக்குதல் போர் விமானமாகவும் பயன்படுத்தி கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது உலகளாவிய ஆயுத சந்தையில் இலகுரக போர் விமானங்களை விடவும், மேற்குறிப்பிட்ட பிரதான பயிற்சி போர் விமானங்களுக்கு தான் மவுசு கூடி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன, அதற்கு காரணம் இலகுரக போர் விமானங்களை சண்டைக்கு தான் அதிகமாக பயன்படுத்த முடியும்.
ஆனால் பிரதான பயிற்சி போர் விமானங்களை பயிற்சி அளிக்கவும் இலகுரக தாக்குதலுக்கும் பயன்படுத்தி கொள்ள முடியும், இதனாலேயே தென் கொரியாவின் KAI FA-50 இன்று சந்தையில் முன்னனி இடத்தை பிடித்துள்ளது, சமீபத்தில் கூட போலந்து நாட்டிற்கு இத்தகைய 48 விமானங்களை ஏற்றுமதி செய்யும் ஆர்டரை பெற்றது.
மலேசிய விமானப்படை ஒப்பந்தம் பெறுவதிலும் இந்தியாவுக்கு மேற்குறிப்பிட்ட தென் கொரிய விமானம் தான் கடுமையான போட்டியாளராக உள்ளது என தகவல்கள் தெரிவிக்கின்றன, இதற்கிடையே துருக்கியும் சூப்பர்சானிக் திறன் கொண்ட இத்தகைய விமானத்தை தயாரித்து வருகிறது.
மேலும் பல நாடுகள் இத்தகைய விமானங்களை உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ள நிலையில் இந்தியா விரைவில் HLFT-42 விமானத்தை தயாரித்து சர்வதேச ஆயுத சந்தையில் களமிறக்க வேண்டியது காலத்தின் கட்டாயம் ஆகும், ஆனால் துரதிர்ஷ்டவசமாக 2019ஆம் ஆண்டு மாதிரி அறிமுகம் செய்யப்பட்டும் இதுவரை பணிகள் துவங்கவில்லை என்பது கவலை அளிக்கும் விஷயமாகும்.