ASW- Anti Submarine Warfare Shallow WaterCraft அதாவது நீர்மூழ்கி எதிர்ப்பு கடலோர கப்பல்களை கொச்சி கப்பல் கட்டுமான தளம் கட்டமைக்க உள்ளது, அந்த வகையில் முதலாவது கப்பலின் கட்டுமான பணிகள் கடந்த மாதம் 30ஆம் தேதி கொச்சி கப்பல் கட்டுமான தளத்தில் நடைபெற்ற விழாவில் துவங்கியது.
இந்த விழாவில் இந்திய கடற்படையின் போர் கப்பல்கள் கட்டுமான மற்றும் கொள்முதல் கட்டுபாட்டு அதிகாரியான வைஸ் அட்மிரல் கிரண் தேஷ்முக், கொச்சி கப்பல் கட்டுமான தளத்தின் மேலாண் இயக்குனர் மது நாயர், கொச்சியில் உள்ள இந்திய கடற்படையின் போர் கப்பல் தயாரிப்பு கண்காணிப்பாளர் அதிகாரியான கமோடர் வி கணபதி உள்ளிட்ட பல மூத்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்வில் வைஸ் அட்மிரல் தேஷ்முக் பேசும்போது இந்த கப்பல்கள் மேக் இன் இந்தியா திட்டத்தில் ஒரு புதிய மைல்கல் எனவும், கடலோர பகுதிகளில் கடலடி ஆபத்துகளை கண்டறிந்து அவற்றை கண்டறிந்து அழிக்க இந்த வகை கப்பல்கள் பேருதவியாக இருக்கும் எனவும் அவர் கூறினார்.
இந்த கடலோர நீர்மூழ்கி எதிர்ப்பு கப்பல்கள் கார்வெட் (Corvette) ரகத்தை சேர்ந்தவை ஆகும், ஒவ்வொரு கப்பலும் தலா 700-750 டன்கள் எடையும், 74-77 மீட்டர்கள் நீளமும், 10.5 மீட்டர்கள் அகலமும், நீருக்கு அடியே 2.7 மீட்டர் வரை கப்பலின் அடிப்பகுதி தாழும் தன்மை கொண்டவை ஆகும், இவற்றை கொச்சி கப்பல் கட்டுமான தளம் மற்றும் கொல்கத்தா GRSE கப்பல் கட்டுமான தளம் ஆகியவை கட்டமைக்க உள்ளன, GRSE கட்டும் கப்பல்கள் அளவில் சற்றே பெரிதாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
ஒட்டுமொத்தமாக இவற்றை கட்ட இந்திய அரசு சுமார் 12,622 கோடி ரூபாய்களை ஒதுக்கீடு செய்துள்ளது, இதில் ஒவ்வொரு கப்பலுக்கும் தலா 789 கோடி ரூபாய் செலவாகும் என கூறப்படுகிறது, இது 2020ஆம் ஆண்டு கணக்கீடு ஆகும், மொத்தமாக இத்தகைய 16 கப்பல்களை கட்ட திட்டமிடப்பட்டு உள்ளது, முதல்கட்டமாக 9 கப்பல்கள் கட்டபட உள்ள நிலையில் அவற்றில் ஐந்து கொச்சியிலும் நான்கு கொல்கத்தாவிலும் கட்டமைக்கப்பட உள்ளன.
இந்த கப்பல்கள் அதிகபட்சமாக 25 நாட்ஸ் வேகத்தில் பயணிக்கும், 14 நாட்ஸ் எனும் மிதமான வேகத்தில் சுமார் 3300 கிலோமீட்டர் தொலைவு பயணம் செய்ய முடியும், அதிநவீன Waterjet Propulsion தொழில்நுட்பம் கொண்டவை அதாவது வழக்கமான எரிபொருளின் சக்தியில் இயங்கும் ஒரு பம்ப் மூலம் கடல்நீரை அதிக வேகத்தில் பீய்ச்சி அதன் மூலம் கிடைக்கும் உந்துசக்தியை கொண்டு பயணிக்கும் தொழில்நுட்பம் ஆகும்.
இந்த வகை கப்பல்களில் 7 அதிகாரிகள் மற்றும் 50 இடைநிலை அதிகாரிகள் , வீரர்கள் என மொத்தமாக 57 கடற்படையினர் இருப்பர், இவற்றை நீர்மூழ்கி எதிர்ப்பு நடவடிக்கை மட்டுமின்றி தேடுதல் மற்றும் மீட்பு, விமான எதிர்ப்பு, கடல்சார் கண்ணிவெடி அமைத்தல், விமானங்களுடன் இணைந்து கண்காணித்தல், ரோந்து உள்ளிட்ட இதர நடவடிக்கைகளையும் மேற்கொள்ள பயன்படுத்தி கொள்ள முடியும் என்பது கூடுதல் தகவலாகும்.
இந்த வகை கப்பல்களில் RBU-6000 நீர்மூழ்கி எதிர்ப்பு ராக்கெட்டுகள், இந்தியாவின் சுதேசி “ஷ்யெனா” (Shyena ALWT) அதிநவீன இலகுரக நீரடிகணைகளை ஏவும் தலா 3 நீரடிகணை (Torpedo) லாஞ்சர்கள்களை கொண்ட இரண்டு அமைப்புகள், நீர்மூழ்கி எதிர்ப்பு கண்ணிவெடிகள், ஒரு 30mm CRN-91 கனரக துப்பாக்கி, ரிமோட் மூலம் இயக்கப்படும் இரண்டு 12.7mm M2 SRCG இயந்திர துப்பாக்கிகள் ஆகியவை பொருத்தப்படும்
மேலும் இவற்றின் அடிப்பகுதியில் பொருத்தப்படும் HMS சோனார், LFVDS எனப்படும் இழுவை சோனார், IAC Mod C நீர்மூழ்கி எதிர்ப்பு சண்டை அமைப்பு, FCS, IPMS, APMS, BDCS என்பது போன்ற பல்வேறு சுதேசி இந்திய தொழில்நுட்ப அமைப்புகளும் இந்த வகை கப்பல்களில் இருக்கும் என்பது இவற்றின் சிறப்பாகும்.
ஏற்கனவே இந்திய கடற்படையில் உள்ள அபய் ரக கடலோர நீர்மூழ்கி எதிர்ப்பு கப்பல்களுக்கு மாற்றாக தயாரிக்கப்படும் அடுத்த தலைமுறை கப்பல்கள் தான் இவை, மேலும் இவை இந்திய கடற்படையில் உள்ள மிகப்பெரிய WaterJet Propulsion திறன் கொண்ட கப்பல்களாகும் என்பது கூடுதல் சிறப்பு.