இந்திய விமானப்படையின் தலைமை தளபதி ஏர் சீஃப் மார்ஷல் விவேக் ராம் சவுதிரி தலைநகர் தில்லியில் உள்ள UNITED SERVICES INSTITUTE மையத்தில் நடைபெற்ற Major Samir Sinha கருத்தரங்கில் கலந்து கொண்டு பேசினார்.
அப்போது அவர் இந்திய விமானப்படைக்கு 6+1 பல உபயோக டேங்கர் போக்குவரத்து விமானங்களை படையில் இணைக்கும் திட்டம் இருப்பதாகவும் அதற்கான முன் முயற்சிகள் நடைபெற்று வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
அதாவது ஆறு FRA Flight Refuelling Tanker எரிபொருள் நிரப்பும் டேங்கர் விமானங்களை கொள்முதல் செய்யவும், 1 FRA எரிபொருள் நிரப்பும் டேங்கர் விமானத்தை குத்தகை முறையில் பெற்று படையில் இணைக்கவும் இந்திய விமானப்படை திட்டமிட்டுள்ளதாக அவர் கூறினார்.
அந்த வகையில் ஏர் இந்தியா Air India விமான நிறுவனத்திடம் இருந்த Boeing 767 ரக விமானங்களை ராணுவ தரத்திற்கு உயர்த்தி எரிபொருள் டேங்கர் போக்குவரத்து விமானங்களாக மாற்றியமைக்க உள்ளனர், இதற்காக இந்தியாவின் HAL மற்றும் இஸ்ரேலின் IAI ஆகியவை ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளன.
இந்த Boeing 767-300 ER Extended Range ரக விமானங்களை ராணுவ தரத்திற்கு மேம்படுத்தி டேங்கர் விமானங்களாக மாற்றியமைக்கும் பணிகள் நிறைவடைய சுமார் 4 ஆண்டுகள் வரை தேவைப்படும் என கூறப்படுகிறது.
மேலும் இந்தியா ஃபிரான்ஸ் விமானப்படை ஏற்கனவே பயன்படுத்தி வரும் ஒரு Airbus 330 MRTT பல உபயோக டேங்கர் போக்குவரத்து விமானத்தை குத்தகை முறையில் பெற்று படையில் இணைக்க விரும்புகிறது.
இந்த Airbus-330 MRTT ரக விமானங்களில் 6 விமானங்களை இந்திய விமானப்படை வாங்க விரும்பிய போது அதிக விலை காரணமாக அந்த கோரிக்கையை இந்திய அரசு நிராகரித்தது, ஆகவே தற்போது 1 விமானத்தை மட்டும் படையில் இணைத்து திறன் சோதனை நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.